அடுத்த 5 ஆண்டுகளில் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை - மத்திய சுகாதார அமைச்சகம்
|மத்திய சுகாதார அமைச்சகம் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளை 2027ஆம் ஆண்டுக்குள் அமைக்க முன்மொழிந்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய சுகாதார அமைச்சகம் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளை 2027ஆம் ஆண்டுக்குள் அமைக்க முன்மொழிந்துள்ளது.
கடந்த மூன்று கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவற்றில் 93 செயல்பாட்டில் உள்ளன, மற்றவை கட்டுமானத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நான்காவது கட்ட திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2027க்குள்), மாவட்ட மருத்துவமனைகளை 100 புதிய மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்துவதற்கான திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரித்துள்ளது. சுகாதாரத் துறையில் மனித வளங்கள் கிடைப்பதை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், மாவட்ட அல்லது பரிந்துரை மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு கல்லூரியை தரம் உயர்த்துவதற்கு ரூ.325 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசுக்கு 60 சதவீதமும், மாநிலத்துக்கு 40 சதவீதமும் இருக்கும்.
இந்த முன்மொழியப்பட்ட 100 மருத்துவக் கல்லூரிகள் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட, தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நூறு மாவட்டங்களில் நிறுவப்பட உள்ளது.100 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான முன்மொழிவுக்கு செலவின நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கப்பட உள்ளது.