10 ஆண்டு கால காதல் கசந்தது... ஓட்டல் அறையில் காதலியை தீர்த்து கட்டி விட்டு தப்பிய காதலன்
|காதலர் ரிஷாப் நிகாம் மற்றும் காதலி வந்தனா திவிவேதி இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
புனே,
மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் ஹிஞ்சாவாடி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு கடந்த 25-ந்தேதி ஜோடி ஒன்று வந்தது.
2 நாட்களாக தங்கியிருந்த அந்த ஜோடி பகலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு அறைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை அந்த ஜோடியில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு ஓட்டல் அறையில் கிடந்துள்ளார். அவருடைய உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், அந்த இளம்பெண் வந்தனா திவிவேதி என்பதும், ஹிஞ்சாவாடி பகுதியிலுள்ள பிரபல ஐ.டி. நிறுவன பணியாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவருடைய காதலர் ரிஷாப் நிகாம். 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர்.
நிகாம் உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்தவர். இவருக்கு காதலியின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியுடன் நிகாம் வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை வந்தனாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, இரவு 10 மணியளவில் ஓட்டல் அறையில் இருந்து நிகாம் வெளியேறிய காட்சிகளும் கிடைத்துள்ளன.
இதன்பின், தப்பி சென்ற நிகாமை மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.