மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை; உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு
|மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மங்களூரு:
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
உடுப்பி அருகே மல்பே பகுதியில் வசித்து வருபவர் 80 வயது மூதாட்டி. தமிழ்நாட்டை சேர்ந்த இவர், கடந்த 40 ஆண்டுகளாக மல்பே பகுதியில் தங்கி மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அதேப்பகுதியில் சிவமொக்காவை சேர்ந்த இர்பான் (வயது 30) என்பவர் கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இர்பான், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் அவர் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார். இதுகுறித்து மல்பே மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இர்பானை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி நடந்தது.
10 ஆண்டு சிறை
இதுகுறித்து மல்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து இர்பானை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த இர்பான், கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த கொலை வழக்கில் கைதாகி கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மல்பே போலீசார் உடுப்பி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது இர்பான் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.