ஜம்மு: பள்ளத்தாக்கில் டாக்சி கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி
|கனமழைக்கு மத்தியில் 10 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஸ்ரீநகரில் இருந்து 10 பயணிகளை ஏற்றிக்கொண்டு டாக்சி இன்று ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டாக்சி அதிகாலை 1.15 மணியளவில் ராம்பன் மாவட்டத்தின் பேட்டரி சாஷ்மா பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அருகில் இருந்த 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். கனமழைக்கு மத்தியில் 10 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் இருவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் ஜம்முவில் உள்ள அம்ப் க்ரோதாவை சேர்ந்த டாக்சி டிரைவர் பல்வான் சிங் (47), மற்றும் பீகாரில் உள்ள மேற்கு சம்பாரனை சேர்ந்த விபின் முகியா பைராகாங் ஆகியோர் அடங்குவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து மத்திய மந்திரியும், உதம்பூர் எம்.பி.யுமான ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "விபத்து நடந்த இடத்தில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி தோடா மாவட்டத்தில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் பஸ் விழுந்ததில் 39 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.