தமிழகத்துக்கு 10 தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு
|தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக சூர்யா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2020-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சினிமாக்களுக்கான 68-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
சூர்யாவுக்கு விருது
தேசிய அளவில் சிறந்த படமாக 'சூரரைப் போற்று' தமிழ்ப்படம் தேர்வு செய்யப்பட்டது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். சுதா கொங்கரா, இயக்கி இருந்தார். இப்படத்துக்கு தங்கத்தாமரை விருதும், ரூ.2½ லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நடிகர் சூர்யாவும் (படம்-சூரரைப் போற்று), நடிகர் அஜய் தேவ்கனும் (படம்-தனாஜி:தி அன்சங் வாரியர்) கூட்டாக தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுக்கான வெள்ளித்தாமரையையும், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.
அபர்ணா பாலமுரளி
சிறந்த நடிகையாக'சூரரைப் போற்று' படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த துணை நடிகராக 'அய்யப்பனும் கோஷியும்' மலையாள படத்துக்காக பிஜு மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகையாக 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' தமிழ் படத்துக்காக லட்சுமி பிரியா சந்திரமவுலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த இயக்குனராக 'அய்யப்பனும் கோஷியும்' மலையாள படத்தை இயக்கிய சச்சிதானந்தன் தேர்வாகி உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறந்த ஜனரஞ்சக படமாக 'தனாஜி:தி அன்சங் வாரியர்' இந்திப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார்
சிறந்த இசையமைப்பாளர் விருதை (பின்னணி இசை) 'சூரரைப் போற்று' படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமாரும், 'ஆல வைகுந்தபுரமுலு' தெலுங்கு படத்துக்காக (பாடல்கள்) எஸ்.தமனும் பெறுகிறார்கள்.
சிறந்த திரைக்கதைக்கான விருதை 'சூரரைப் போற்று' படத்துக்காக சுதா கொங்கரா, ஷாலினி உஷா நாயர் ஆகியோரும், வசனத்துக்கான விருதை 'மண்டேலா' தமிழ் படத்துக்காக மடோன் அஸ்வினும் பெறுகிறார்கள்.
மண்டேலா
தமிழில் சிறந்த படமாக 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த புதுமுக இயக்குனர் விருது, 'மண்டேலா' படத்தை இயக்கிய மடோன் அஸ்வினுக்கு வழங்கப்படுகிறது.
இதர விருதுகள் வருமாறு:-
சிறந்த தெலுங்கு படம்:- கலர் போட்டோ
சிறந்த மலையாள படம்:- திங்களச்சா நிச்சயம்
சிறந்த கன்னட படம்:- தொள்ளு
சிறந்த இந்தி படம்:- துளசிதாஸ் ஜூனியர்
சண்டை இயக்கம்
சண்டை இயக்கம்:- அய்யப்பனும் கோஷியும்
நடன இயக்கம்:- சந்தியா ராஜு (நாட்யம்-தெலுங்கு)
பாடலாசிரியர்:- மனோஜ் முண்டாஷிர் (சாய்னா-இந்தி)
ஒப்பனை:- ராம்பாபு (நாட்யம்-தெலுங்கு)
ஆடை வடிவமைப்பு:- நச்சிகேத் பர்வே, மகேஷ் ஷெர்லா (தனாஜி:தி அன்சங் வாரியர்-இந்தி)
தயாரிப்பு நிர்வாகம்:- அனீஸ் நாடோடி (கப்பெலா-மலையாளம்)
பாடகர், பாடகி
படத்தொகுப்பு:-ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்-தமிழ்)
ஒளிப்பதிவு:- சுப்ரதிம் போல் (அபிஜத்ரிக்-பெங்காலி)
பின்னணி பாடகர்:- ராகுல் தேஷ்பாண்டே (மி வசந்த்ராவ்-மராத்தி)
பின்னணி பாடகி:- நஞ்சம்மா (அய்யப்பனும் கோஷியும்-மலையாளம்)
குழந்தை நட்சத்திரம்:- அனிஷ் மங்கேஷ் கோசவி, அகங்க்ஷா பிங்க்ளே, திவ்யேண் இந்துல்கர்
குழந்தைகள் படம்:-சுமி (மராத்தி)
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம்:- தலேதண்டா (கன்னடம்)
10 விருதுகள்
'சூரரைப் போற்று' படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை பெற்றுள்ளது. 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம், தமிழில் சிறந்த படம், துணை நடிகை, படத்தொகுப்பு என 3 விருதுகளும், 'மண்டேலா' படம், சிறந்த வசனம், புதுமுக இயக்குனர் என 2 விருதுகளும் பெற்றுள்ளன.
எனவே, தமிழ் திரையுலகுக்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.