மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அறைக்கு தீ வைத்த கணவன் - 10 பேர் காயம்
|மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அறைக்கு கணவன் தீ வைத்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
காசியாபாத்,
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமடைந்த கணவன், கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி அறைக்கு தீ வைத்ததில் 10 பேர் தீக்காயமடைந்தனர். லோனி எல்லைப் பகுதியில் உள்ள திலக் நகர் காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு கணவரை விட்டு பிரிந்து தனியாக வசிக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இதுகுறித்து சுரேஷின் மனைவி ரிது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கேஸ் சிலிண்டரை குழாயை அடுப்பிலிருந்து வெளியே எடுத்துள்ளார். இதனால் அறை முழுவதும் எரிவாயு பரவத்தொடங்கியது. இதையடுத்து ரிது உதவிக்காக கூச்சலிட்டார். ரிதுவின் சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காஸ் ரெகுலேட்டரை அணைக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள்ளாக சுரேஷ் லைட்டரை பயன்படுத்தி தீ பற்ற வைத்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் அறையில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் சுரேஷ், அவரது மனைவி, குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உட்பட 10 பேர் தீக்காயமடைந்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சுரேஷின் குடும்ப உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டு அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.