< Back
தேசிய செய்திகள்
கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் மரணம்
தேசிய செய்திகள்

கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் மரணம்

தினத்தந்தி
|
22 Oct 2023 11:17 AM IST

குஜராத்தில் கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத்,

நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

இந்நிலையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இளவயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கர்பா நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இதேபோல் அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபரும் கர்பா நடனமாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளார். இதேபோல், மேலும் 8 உயிரிழப்புகள் குஜராத்தில் பதிவாகியுள்ளன.

நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்துள்ளன.

இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என குஜராத் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இள வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

மேலும் செய்திகள்