< Back
தேசிய செய்திகள்
கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் மீது காகித வீச்சு: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம்
தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் மீது காகித வீச்சு: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் இடைநீக்கம்

தினத்தந்தி
|
20 July 2023 3:34 AM IST

கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் மீது காகிதத்தை கிழித்து வீசியதுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் யு.டி.காதர் இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் 10 எம்.எல்.ஏ.க்களும் குண்டுக்கட்டாக தூக்கி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை நேற்று காலை கூடியது. சட்டசபை கூடியதும் பா.ஜனதா உறுப்பினர்கள், பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சட்டவிரோதமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதாக கூறி தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்காக கர்நாடக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்காக அவர்கள் ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோதும், பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு குரலை உயர்த்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இந்த கூச்சல்-குழப்பத்திற்கு இடையே மாநில அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியது.

இதற்கு பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். சபை சரியான நிலையில் இல்லாதபோது, மசோதாக்களை நிறைவேற்றுவது சரியா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இருக்கைக்கு திரும்பும்படி அவர்களை சபாநாயகர் யு.டி.காதர் தொடர்ந்து கேட்டுக் கொண்டார். இதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தனர். அப்போது இருக்கையில் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி அமர்ந்திருந்தார். அவர் மீது வந்து விழுந்த காகிதங்களை சபை காவலர்கள் அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 4 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது.

அப்போது சபாநாயகர் யு.டி.காதர், இந்த சபையில் கண்ணியம் குறைவாக நடந்து கொண்டதுடன் சபைக்கு அவமரியாதையை ஏற்படுத்திய பா.ஜனதா உறுப்பினர்கள்(எம்.எல்.ஏ.க்கள்) ஆர்.அசோக், சுனில்குமார், அஸ்வத் நாராயண், வேதவியாஸ் காமத், உமாநாத் கோட்டியான், பரத்ஷெட்டி, அரவிந்த் பெல்லத், யஷ்பால் சுவர்ணா, தீரஜ் முனிராஜூ, அரக ஞானேந்திரா ஆகிய 10 பேரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். சபாநாயகர் கொண்டு வந்த இந்த இடைநீக்க தீர்மானத்தை அரசு அனுமதித்தது. அதைத்தொடர்ந்து இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 10 எம்.எல். ஏ.க்களும் சபையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். அதன் பிறகு சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த கூட்டத்தொடர் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.

இந்த 2 நாட்களும் அவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இந்த இடைநீக்க உத்தரவு காலாவதியாகி விடும். அடுத்த கூட்டத்தொடர் தொடங்கும்போது அவர்கள் வழக்கம்போல் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முதல் முறையாக ஒரே நாளில் 10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சபை 10 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கூடியது. அப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.

இதையடுத்து சபாநாயகர், அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் அந்த 10 எம்.எல்.ஏ.க்களையும் குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். இதனால் சபையில் பரபரப்பான சூழல் நிலவியது. அதன் பிறகு சபை நடவடிக்கைகள் நடைபெற்றன.

எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மயக்கம்

சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விதான சவுதாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சபாநாயகருக்கு எதிராக குரலை உயர்த்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை சக எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக சக்கர நாற்காலியில் உட்கார வைத்து வெளியே அழைத்து வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். அதுபோல் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து ஜனதாதளம் (எஸ்) கட்சியினரும், அக்கட்சி மூத்த தலைவர் குமாரசாமி தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இரு கட்சியினரும் சட்டசபை சபாநாயகர் அலுவலகம் முன்பு படிக்கட்டுகளில் தர்ணாவில் ஈடுபட்டனர். இரு கட்சியினரும் இரவில் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பசவராஜ்பொம்மை, குமாரசாமி உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கர்நாடக சட்டசபை அலுவலகமான விதானசவுதாவில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நீடித்தது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்