< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

மணிப்பூர் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு - 5 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
7 Sept 2024 9:47 AM IST

மணிப்பூரில் முன்னாள் முதல் மந்திரி வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில் முதியவர் உயிரிழந்தார்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இது போன்ற பரபரப்பான சூழலுக்கு இடையே அங்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இது மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் ராக்கெட் குண்டு வீசப்பட்டது. இந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராக்கெட் குண்டு விழுந்த இடத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்