< Back
தேசிய செய்திகள்
பொது சிவில் சட்டம் குறித்து 1 கோடி கருத்துக்கள் பதிவு - மத்திய சட்டத்துறை மந்திரி தகவல்
தேசிய செய்திகள்

பொது சிவில் சட்டம் குறித்து 1 கோடி கருத்துக்கள் பதிவு - மத்திய சட்டத்துறை மந்திரி தகவல்

தினத்தந்தி
|
30 July 2023 10:55 PM IST

நாடு முழுவதிலும் இருந்து 1 கோடி கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து கூறலாம் என்று இந்திய சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14-ந்தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்துக்களை ஆன்லைன் வாயிலாகவோ அல்லது சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலர் முகவரிக்கு தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகளைத் தெரிவிக்க ஜூலை 28-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது. காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை நாடு முழுவதும் இருந்து 22-வது சட்ட ஆணையத்திடம் பொது சிவில் சட்டம் குறித்து சுமார் 1 கோடிக்கும் அதிகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

தற்போது பெறப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும், அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்