மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் தங்கம் பறிமுதல்
|சோதனையின்போது காலணிக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பை,
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு கடந்த 10-ந் தேதி இரவு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கவரித்துறையினர் சோதனை போட்டனர்.
அப்போது வெளிநாட்டை சேர்ந்த 3 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கவரித்துறையினர் அவர்களின் உடைமைகளில் சோதனை செய்தனர். இதில் எதுவும் சிக்கவில்லை. அப்போது அவர்கள் அணிந்திருந்த காலணிகள் பார்க்க வித்தியாசமாக இருப்பதை கவனித்த அதிகாரிகள், அந்த காலணிகளை வாங்கி பிரித்து சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது காலணிக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அணிந்திருந்த காலணிகளில் இருந்து மொத்தம் 3 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 40 லட்சம் ஆகும். இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 3 பேரையும் அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாகர் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.