சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் பயணம்
|ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த பயணத்தின்போது 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய அளவில் சுற்றுலா தொடர்பான திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதேபோல், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அரசு பணியில் புதிதாக இணைந்துள்ள 1000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.