ஒடிசா மதுபான நிறுவனத்தில் நடந்த ஐடி ரெய்டு: கட்டுக்கட்டாக சிக்கிய ரூ. 290 கோடி
|நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகையான இதை எண்ணுவதற்கு கூடுதல் எந்திரங்களையும், எடுத்துச்செல்ல அதிக வாகனங்களையும் அதிகாரிகள் பயன்படுத்தினர்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் உள்ள மதுபான நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திடீர் அதிரடி சோதனையை தொடங்கினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. மொத்தம்150 அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரி சோதனை நடந்த இடங்களில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாகுவுக்கு சொந்தமான இடமும் அடங்கும்.
இந்த சோதனையில் நேற்று முன்தினம் வரை ரூ.250 கோடி கருப்பு பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது.
இந்த நிலையில் நேற்றும், கணக்கில் வராத பெருந்தொகை கைப்பற்றப்பட்ட நிலையில், பிடிபட்ட மொத்த தொகையின் மதிப்பு ரூ.290 கோடியை நெருங்கியது. பணத்தை எண்ணிக்கொண்டே இருந்ததால் எந்திரமும் கோளாறு அடைந்தது. இதனால், பணம் எண்ணும் பணிக்காக அதிக வருமான வரித்துறை அலுவலர்களும், வங்கி ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.
நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகையாக இந்த ரூ.290 கோடி கருதப்படுகிறது. இது தொடர்பாக குறிப்பிட்ட மதுபான நிறுவன அதிகாரிகளின் வாக்குமூலத்தை வருமான வரித்துறையினர் நேற்று பதிவு செய்தனர். குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களின் அலுவலகங்கள், வீடுகளிலும் சோதனை தொடரும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.