< Back
தேசிய செய்திகள்
ஸ்கூட்டரின் விலையை விட மிஞ்சிய அபராத தொகை: 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணி
தேசிய செய்திகள்

ஸ்கூட்டரின் விலையை விட மிஞ்சிய அபராத தொகை: 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணி

தினத்தந்தி
|
16 April 2024 4:40 PM IST

பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதித்து வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் ஹெல்மெட் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஓட்டி வரும் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் இதுவரை 270 முறை அவர் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக போக்குவரத்து போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரு போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைகளில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. இந்நிலையில், அந்த பெண்ணின் விதிமீறல்களுக்காக ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும். இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்