ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?- மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு
|Will the rail fare concession be available again?- Expectations of senior citizens
ரெயில்களில் கடந்த 2 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொரோனாவால் பறிப்பு
மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது. இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.
பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-
ஆன்மிக சுற்றுலா
பெங்களூரு அல்சூரில் வசிக்கும் பத்மாவதி (வயது 59) கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகளாக ரெயிலில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டணத்தை ரத்து செய்து உள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது கணவருடன் நான் அடிக்கடி சென்னைக்கு ரெயிலில் பயணம் செய்து வந்தேன். எனக்கும், கணவருக்கும் சலுகை கட்டணம் இருந்தது. தற்போது அந்த கட்டணம் இல்லை. வயதான காலத்தில் நானும், கணவரும் ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் சலுகை கட்டணம் இல்லாததால் ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டோம். ரெயில்வேக்கு வருவாய் வந்து கொண்டே தான் இருக்கிறது. மூத்த குடிமக்களை மத்திய அரசு நினைத்து பார்க்க வேண்டும்.
மைசூருவை சேர்ந்த காசிநாத் (வயது 70) கூறும்போது, "ரெயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணத்தை ரத்து செய்தது சரியான நடவடிக்கை இல்லை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மூத்த குடிமக்கள் ரெயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். கட்டணம் குறைவு என்பதால் முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டிகளில் என்னை போன்ற முதியோர்களால் பயணம் செய்ய முடியாது. ஏனென்றால் அந்த பெட்டிகளில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் இருக்கும். சலுகை கட்டணம் இல்லாமல் முழு கட்டணத்தையும் செலுத்தி ரெயிலில் செல்வது மூத்த குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வேக்கு ஏற்படும் இழப்பால் சலுகை கட்டணத்தை ரத்து செய்ததாக கூறுகிறார்கள். சலுகை கட்டணத்தை ரத்து செய்த காரணத்தால், தற்போது மூத்த குடிமக்கள் ரெயில் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால் ரெயில்வேக்கு இழப்பு ஏற்படாதா?. பறிக்கப்பட்ட கட்டண சலுகையை இன்னும் வழங்காமல் இருப்பது முதியோர்களை ரெயில்வே நிர்வாகமும் சிரமமாக கருதுகிறதோ? என்று எண்ணத்தோன்றுகிறது." என்றார்.
வாபஸ் பெற வேண்டும்
பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 65) கூறுகையில், "மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் சலுகை கட்டணம் வழங்கியதால் நான் உள்பட பெரும்பாலானோர் வெளிமாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதுபோல் வெளியூர்களில் வசிக்கும் குடும்பத்தினர், உறவினர்களை மாதந்தோறும் சென்று பார்த்து வந்தோம். வாழ்க்கையில் ஓடி ஓடி உழைத்து ஓய்ந்த முதியவர்களுக்கு இந்த சலுகை கட்டணம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் அந்த சலுகையை ரத்து செய்தது சரியல்ல. ஒரு சலுகை கிடைப்பதற்கு காத்திருப்பதே வேதனையான விஷயம் ஆகும். அதுவும் கொடுத்த சலுகையை பறிப்பது என்பது மிகவும் வேதனைக்குரியது. எனவே ரெயில்வே நிர்வாகம் இழப்பீட்டை சமாளிக்க கூடுதல் ரெயில்களை இயக்குவது, சரக்குகளை அதிகம் கையாள்வது போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, பறிக்கப்பட்ட முதியோர் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்" என்றார்.
மைசூருவை சேர்ந்த ரேவண்ணா (வயது 66) கூறும்போது, "மத்திய அரசு அனைத்து பொது துறைகளையும் தனியார் மயமாக்கி வருகிறது. ரெயில்வே துறையையும் தனியார் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. தனியாருக்கு லாபம் ஏற்படுத்தி கொடுப்பதற்காக மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணத்தை ரத்து செய்து உள்ளனர். பணக்கார குடும்பங்களை சேர்ந்த மூத்த குடிமக்கள் ரெயிலில் முழு கட்டணத்தை செலுத்தி சென்று விடுவார்கள். ஆனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மூத்த குடிமக்களை மத்திய அரசு நினைத்து பார்க்க வேண்டும். சலுகை கட்டண ரத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என்றார்.
மகள் வீட்டுக்கு செல்ல முடியவில்லை
சிவமொக்கா வினோபா நகரை சேர்ந்தவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான சுப்பிரமணி (வயது 72) கூறும்போது, "மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணத்தை திடீரென நிறுத்தியது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. நீரிழிவு நோயால் அவதிப்படும் வயதானவர்கள் பயணத்தின் போது அடிக்கடி கழிவறைக்கு செல்ல ரெயில் பயணம் தான் உகந்தது. ஆனால் சலுகைகட்டணம் ரத்தால் மூத்த குடிமக்கள் வருகை குறைந்து உள்ளது. சலுகை கட்டணத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும்" என்றார்.
சிவமொக்கா பாரதி காலனியை சேர்ந்த லட்சுமி (வயது 58), "தமிழ்நாடு திண்டிவனத்தில் உள்ள எனது மகள் வீட்டிற்கு நான் ரெயிலில் செல்வது வழக்கம். சலுகை கட்டணம் இருந்த போது ரெயிலில் டிக்கெட் ரூ.300 இருந்தது. தற்போது ரூ.500 ஆக உள்ளது. பஸ் கட்டணம் ரூ.700. எனக்கு கணவர் இல்லை. தனியாக தான் வசிக்கிறேன். என்னிடம் வருமானமும் இல்லை. சலுகை கட்டணம் இல்லாததால் மகள் வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வருகிறேன். முன்பு போல வே பெண்களுக்கு 50 சதவீத சலுகை கட்டணம் வழங்க வேண்டும் என்பது எனது கோரிக்கை" என்றார்.
இருக்கை பிரச்சினை
மேலும் சிலர் கூறுகையில், "சலுகை கட்டணம் இருக்கும் போது டிக்கெட் முன்பதிவு செய்தால் மூத்த குடிமக்கள் என்று குறிப்பிடும் போது வயதுக்கு தகுந்தாற்போல இருக்கைகள் ஒதுக்கப்படும். தற்போது மூத்த குடிமக்களுக்கு உயரமான இருக்கை ஒதுக்கப்படுகிறது. இதனால் மூத்த குடிமக்களால் உயரமான இருக்கைக்கு ஏற முடிவது இல்லை. இருக்கைக்காக பிறரிடம் கெஞ்ச வேண்டிய நிலையும் உள்ளது" என்றனர்.