மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நெருங்கும் என்.டி.ஏ கூட்டணி: 3 எம்.பி.க்களே தேவை
|மூன்று மாநிலங்களில் காலியாக உள்ள 15 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் கடந்த 27 ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் உட்பட 41 வேட்பாளர்கள் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டனர். அதேசமயம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்தம் 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருந்த 10 மாநிலங்களவை இடங்களுக்கு ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. 7 உறுப்பினர்களை தேர்வு செய்ய தேவையான எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த பா.ஜ.க. கூடுதலாக ஒரு வேட்பாளரை களம் இறக்கியது. அதாவது பா.ஜ.க. சார்பில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் 3 பேர் போட்டியிட்டனர்.
ஆனால், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், சமீபத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கியமான ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், பா.ஜ.க. வின் 8-வது வேட்பாளர் சஞ்சய் சேத் வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேசத்தில் 7 இடங்களை பெற வேண்டிய பா.ஜ.க. 8 இடங்களை பெற்றது. சமாஜ்வாதி கட்சி சார்பில் 2 பேர் போட்டியிட்ட நிலையில், அலோக் ரஞ்சன் தோல்வியடைந்தார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாற்றி வாக்களித்தார். மேலும் ஒரு எம்.எல்.ஏ. வாக்களிக்காததால் பா.ஜ.க.மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி வேட்பாளர் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் வெற்றி பெற்றார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 4 இடங்களில் 3 இடங்களை காங்கிரஸும், ஒரு இடத்தை பா.ஜ.க.வும் கைப்பற்றியது.
அதேபோல், இமாச்சலப்பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் அம்மாநிலத்தில் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் கட்சி மாறி வாக்களித்ததால் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மொத்தம் 15 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 10 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. ஆனாலும், மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மையை இன்னும் அக்கட்சி பெறவில்லை. மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மைக்கு 121 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.க.விடம் 97 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களையும் சேர்த்தால் மொத்தம் 118 எம்.பி.க்கள் பா.ஜ.க. வசம் உள்ளனர். பெரும்பான்மை கிடைக்க பா.ஜ.க. கூட்டணிக்கு இன்னும் 3 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல், மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்து வரும் பா.ஜ.க.வுக்கு, மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவது பா.ஜ.க.வுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
குறிப்பாக, ஊழல் மற்றும் கருப்பு பணம் தொடர்பான ஜனாதிபதி உரையானது எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. 2019-ம் ஆண்டு வரை, நில சீர்திருத்தம் மற்றும் முத்தலாக் போன்ற சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இரண்டாவது ஆட்சி காலத்தில்தான், பா.ஜ.க.வால் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது.
2019-ம் ஆண்டுக்கு பிறகும், மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் ரத்து போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவின் பலம் கூடுகிறது. மாநிலங்களவை தேர்தலின்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்.களும் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த காரணத்தால் இரண்டு மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் கூடுதலாக வென்றுள்ளது.
மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு மொத்தமாக 97 உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு 29 உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 உறுப்பினர்களும் திமுக, ஆம் ஆத்மி கட்சிக்கு தலா 10 உறுப்பினர்களும் உள்ளனர். பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தலா 9 உறுப்பினர்கள் உள்ளனர். பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கு 7 மாநிலங்களவை உறுப்பினர்களும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.