< Back
தேசிய செய்திகள்
காதலிக்க மறுத்த வாலிபரின் சகோதரி படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளம்பெண்
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த வாலிபரின் சகோதரி படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளம்பெண்

தினத்தந்தி
|
19 Nov 2022 3:02 AM IST

பெங்களூருவில், காதலிக்க மறுத்த வாலிபரின் சகோதரியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு: பெங்களூருவில், காதலிக்க மறுத்த வாலிபரின் சகோதரியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

செல்போனுக்கு அழைப்புகள்

பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு கடந்த சில நாட்களாக ஆண்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசினார்கள். மேலும் இளம்பெண்ணை விபசாரத்திற்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. தனது செல்போனுக்கு ஆண்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்ததால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிர்ச்சி தரும் பல தகவல்கள் தெரியவந்தது. அதாவது இளம்பெண் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதும், அதில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இன்ஸ்டாகிராமில் ஆபாச புகைப்படங்கள்

மேலும் இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்ததுடன், அவரை விபசார அழகி போல சித்தரித்து, அவரது செல்போன் எண்ணும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்து தான் இளம்பெண்ணுக்கு, ஆண்கள் தொடர்பு கொண்டு பேசியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் இளம்பெண்ணின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, ஆபாச படங்களை பதிவேற்றிய மர்மநபர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணுக்கு நன்கு தெரிந்த மற்றொரு இளம்பெண் தான் இந்த மோசடியில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட மற்றொரு இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அண்ணன் காதலிக்க மறுத்ததால்...

விசாரணையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் அண்ணனை கைதான இளம்பெண் காதலித்திருக்கிறார். ஆனால் தோழனாக பழகிய அந்த வாலிபர், இளம்பெண்ணின் காதலை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் வேறு பெண்ணை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கைதான இளம்பெண்ணை காதலிக்க கூடாது என்று தனது அண்ணனிடம் அந்த பெண் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, காதலனின் சகோதரியை பழிவாங்க இளம்பெண் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் தொடங்கி, அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதுடன், செல்போன் எண்ணையும் பதிவு செய்தது தெரியவந்தது. கைதான இளம்பெண் மீது வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்