< Back
தேசிய செய்திகள்
வீட்டில் தீப்பிடித்து வங்கி அதிகாரி உடல் கருகி சாவு
தேசிய செய்திகள்

வீட்டில் தீப்பிடித்து வங்கி அதிகாரி உடல் கருகி சாவு

தினத்தந்தி
|
16 Nov 2022 12:15 AM IST

Bank officer burnt to death in house fire

மங்களூரு:

வீட்டில் தீ விபத்து

உடுப்பி டவுன் கிருஷ்ணமடம் அருகே வாதிராஜா பகுதியை சேர்ந்தவர் ராஜ்கோபால் சமகா (வயது 42). தனியார் வங்கி அதிகாரியான இவர், ஐதராபாத்தில் உள்ள கிளையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் தான் மங்களூருவில் உள்ள கிளைக்கு இடமாறுதல் ஆகி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் தீப்பிடித்து எரிந்தது. மேலும் ராஜ்கோபாலின் உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

உடல் கருகி சாவு

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக உடுப்பி டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். மேலும் ராஜ்கோபால் மீதும் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து உடுப்பி டவுன் போலீசார், உடல் கருகி உயிரிழந்த ராஜ்கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் வெடித்து விபத்தா?

மேலும் போலீசார் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். ராஜ்கோபால், வீட்டில் இருந்தபடியே மடிக்கணினி மற்றும் செல்போன் மூலம் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் செல்போன் வெடித்து வீட்டில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனாலும் வீட்டில் தீப்பிடித்தற்கான உறுதியான காரணம் தெரியவில்லை.

உயிரிழந்த ராஜ்கோபாலுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். தீவிபத்து ஏற்பட்டபோது ராஜ்கோபாலின் மனைவியும், மகனும் வீட்டில் இல்லாததால் அவர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்