சுதந்திரதினம்: ஒவ்வொரு இந்தியரையும், இந்தியாவை விரும்புபவர்களையும் வாழ்த்துகிறேன் - பிரதமர் மோடி
|இந்த சுதந்திரதினத்தன்று ஒவ்வொரு இந்தியவரையும், இந்தியாவை விரும்புபவர்களையும் வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.
இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது;-
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நமது மூவர்ணக்கொடி பெருமை மற்றும் மரியாதையுடன் பறக்கிறது. இந்த சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியரையும், இந்தியாவை விரும்புபவர்களையும் நான் வாழ்த்துகிறேன்.
புதிய தீர்மானத்துடன் புதிய திசையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள் இது. சுதந்திர போராட்டத்தின்போது, நமது சுதந்திரபோராட்ட வீரர்கள் கொடூரம் மற்றும் கொடுமைகளை சந்திக்காத ஆண்டுகளே இல்லை. சுதந்திரபோராட்ட வீரர்களுக்கு நாம் நமது மரியாதையை செலுத்தும் நாள் இன்று, நாம் அவர்களின் நோக்கத்தையும், இந்தியாவிற்கான அவர்களின் கனவையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
பிரிட்டிஷ் சாம்ராஜியத்தின் அடித்தளத்தை அசைத்த காந்திஜி, பகத்சிங், ராஜ்குரு, ராம்பிரசாத் பிஸ்மில், ராணி லட்சுமி பாய், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அனைத்து விடுதலை போராட்ட வீரர்களுக்கும் நமது நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது' என்றார்.