சமத்துவத்தை உணர்த்தும் வேளாங்கண்ணி தேர் பவனி
|வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவில் தேர் பவனி மிகவும் சிறப்பான நிகழ்வு.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெறும் ஆண்டு பெருவிழாவானது, ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒருங்கிணைக்கும் சமத்துவ விழாவாக நடைபெறும். அனைவரும் ஒன்றுபட்டு கொண்டாடும் திருவிழா.
சொந்த பந்தங்கள் உறவினர்கள் பல்வேறு இடத்தில் வாழ்ந்தாலும் ஊர்த் திருவிழாவில், தேர் பவனி (தேரோட்டம்) காலங்களில் ஒன்று கூடுகின்றனர். உறவுகளை புதுப்பிக்கின்றனர். சமபந்தி அன்னதானமும் நடத்துகின்றனர்.
குறிப்பாக வேளாங்கண்ணி அன்னையின் திருவிழாவில் தேர் பவனி மிகவும் சிறப்பான நிகழ்வு. இந்த தேர் பவனி எல்லா சமய மக்களையும் கவரக்கூடியது. ஒவ்வொரு நாளும் பல ஊர்களில் இருந்து வந்து உபயமாக தேர் பவனி எடுப்பார்கள். அதற்கான உபய செலவுகளை மக்களே ஏற்றுக் கொள்வார்கள். பிற்பகல் 3 மணியில் இருந்தே டோக்கன் பெற்றுக்கொண்டு அன்னையின் தேரை சுமக்க காத்திருப்பார்கள்.
சரியாக மாலை 5 மணிக்கு ஜெபமாலை நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலி முடிந்து இரவு 7.30 மணிக்கு தேர்பவனி ஆரம்பமாகும். காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் தேர் பவனியில் மரியாயின் சேனையாளரால் சொல்லப்படும் சங்கிலி ஜெபம், தமிழில் இரு தந்தையர்களால் சொல்லப்படும் ஜெபம் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்டு நலனுக்காகவும் திருச்சபை மக்களின் நலனுக்காகவும் ஜெபிக்கப்படும்.
வண்ண வண்ண மலர்களாலும், எண்ணற்ற மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் தேரில் பவனி வரும் அன்னையின் புகழை பக்தர்கள் பாடிக்கொண்டும், மரியே வாழ்க என்று முழக்கமிட்டும் செல்வார்கள். தேர் கடற்கரை சாலை வழியாக வந்து ஆலயத்தின் முன்பு நிற்கும். மீண்டும் மக்கள் அன்னையை பார்த்து ஜெபித்து அன்னையின் பிரசன்னத்தை உணர்ந்து மகிழ்ச்சியோடு செல்வார்கள்.