திருமலையில் பிரம்மோற்சவ ஒத்திகை கருட சேவை
|கருட வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி எழுந்தருளி, இரவு 7 மணி முதல் 9 மணி வரை நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி திருமலையில் இன்னும் இரண்டு வாரங்களில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, வழக்கமான மாத பவுர்ணமியை முன்னிட்டும், பிரம்மோற்சவ கருட சேவையை முன்னிட்டும், நேற்று கருட சேவை ஒத்திகை நடைபெற்றது. கருட வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி எழுந்தருளி, இரவு 7 மணி முதல் 9 மணி வரை நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் சிவிஎஸ்ஓ ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர். நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகள், நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள், நடனக் குழுவினரின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக தேவஸ்தானம் இதுபோன்ற கருட சேவை ஒத்திகையை நடத்துவது வழக்கம்.