திருப்பதி பிரம்மோற்சவம்.. ஹனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமராக எழுந்தருளிய மலையப்ப சுவாமி
|மலையப்ப சுவாமி வில் அம்பு ஏந்தி ஸ்ரீ கோதண்ட ராமராக ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ம் தேதி தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் 5-ம் நாளான நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் காட்சியளித்த உற்சவர் மலையப்ப சுவாமி, மாலையில் தங்க கருட வாகனத்தில் உலா வந்தார். அப்போது மாட வீதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்து கோவிந்தா கோஷங்களை எழுப்பி பகவானை தரிசனம் செய்தனர்.
ஆறாம் நாளான இன்று காலை 8 மணிக்கு ஹனுமந்த வாகன சேவை கோலாகலமாக நடைபெற்றது. மலையப்ப சுவாமி, வில் அம்பு ஏந்தி ஸ்ரீ கோதண்ட ராமராக ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகனத்தின் முன் திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பலர் கற்பூரம் ஏற்றி சுவாமியை தரிசித்தனர்.
திருப்பதி பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை செயல் அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மம் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வாகன சேவையில் பங்கேற்றனர்.
இன்று மாலை 4 முதல் 5 மணி வரை ஸ்ரீமலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். இரவு 7 மணிக்கு கஜவாகன சேவை நடைபெறுகிறது.