சேலம் கஞ்சமலை சித்தர் கோவில் கும்பாபிஷேகம்: 15-ம் தேதி நடக்கிறது
|யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவானிடத்தில் இருந்து பெறும் நிகழ்ச்சி 13-ம் தேதி நடைபெறும்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலையில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சித்தர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோவில் முன்பு முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் பூசாரிகள், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து வருகிற 13-ம் தேதி, மதியம் 12 மணிக்கு மேல் யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவானிடத்தில் இருந்து பெறும் நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து 14-ம் தேதி காலை 6.30 மணி அளவில் 2-ம் கால யாக பூஜை, மாலை 4.30 மணி அளவில் லட்சுமி பூஜை, தீப பூஜை, மூலிகைகளை கொண்டு யாகங்கள் ஆகியவை நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மேல் 6.20-க்குள் எந்திர நவரத்தின பஞ்சலோக மூல விக்ரஹ அஷ்ட பந்தன சாத்துதல் நடைபெறும்.
செப்டம்பர் 15-ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல், 8 மணிக்குள் முருகனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 8.15 மணிக்குள், காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் மூலவர் சித்தருக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.