சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை அடைப்பு
|ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 13-ந்தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 14-ந் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. 15-ந் தேதி திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகளுடன் அய்யப்ப பக்தர்களுக்கு ஓணம் விருந்து (சத்யா) வழங்கப்பட்டது. ஓணம் விருந்து 16 மற்றும் 17-ந் தேதியும் தொடர்ச்சியாக 3 நாட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் 8-ம் நாளான நாளை (சனிக்கிழமை) கோவிலில் சகஸ்ர கலச பூஜை மற்றும் வழிபாடுகள் தந்திரி தலைமையில் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் தினசரி 50 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.