நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை..! மகிழ்ச்சி பெருக மாவிளக்கு ஏற்றி வழிபடுங்கள்..!
|புரட்டாசி முதல் சனிக்கிழமையில் தளிகை போட்டும், மாவிளக்கு ஏற்றியும் பெருமாளை வழிபடலாம்.
பெருமாளுக்கு பிடித்தமான புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் ஆராதனைகள் என விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்யலாம்.
அவ்வகையில் நாளை (21.9.2024) புரட்டாசி முதல் சனிக்கிழமை. இந்த நாளில் தளிகை போட்டும், மாவிளக்கு ஏற்றியும் பெருமாளை வழிபடலாம்.
திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல், வீட்டில் வெங்கடாஜலபதி படத்தை வைத்தும் பூஜை செய்து வழிபடலாம். வெங்கடேச அஷ்டகம் சொல்லி பூஜை செய்யவேண்டும். அல்லது கோவிந்தா நாமம் சொல்லி பூஜை செய்யலாம். குறிப்பாக, துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.
மாவிளக்கு செய்து அதில் நெய்விட்டு தீபமேற்றி பெருமாளை வழிபடுவதால் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும், மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.
மாவிளக்கு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பச்சரிசி – கால் கிலோ, வெல்லம் – 100 கிராம், ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன், சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், பச்சை கற்பூரம் – சிறிதளவு.
செய்முறை: பச்சரிசி மாவு வைத்திருப்பவர்கள் சுலபமாக செய்யலாம். இல்லாதவர்கள் பச்சரிசியை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு உலர வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு உலர்ந்ததும் மிக்சியில் நன்றாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவுடன் வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றலாம் அல்லது மிக்சியில் நைசாக அரைத்தும் சேர்க்கலாம். அதன் பின் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளலாம். ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்பதில்லை. இருந்தால் சேர்க்கலாம். இதை சேர்த்தால் தெய்வீக வாசமாக இருக்கும்.
எல்லாம் ஒன்றாக கலந்துவிட்டு தேவையான அளவிற்கு நெய் சேர்த்து கெட்டியாக உருண்டை பிடிக்க வேண்டும். பின்னர் லேசாக அழுத்தி தட்டையாக்கி, ஒரு புறம் மட்டும் விரலால் அழுத்தி குழி ஏற்படுத்தி தீப வடிவில் செய்யவேண்டும். அதில் சந்தன குங்குமம் இட்டு, திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
எப்போதும் மாவிளக்கு ஒற்றை விளக்காக ஏற்றக்கூடாது. இரண்டு தீபங்கள் அல்லது நான்கு தீபங்கள் ஏற்றுவது நல்லது. மாவிளக்கை பூஜைக்கு பிறகு நாம் நிவேதனமாக உண்பதால் உணவாக பயன்படுத்தக்கூடிய சுத்தமான நெய் ஊற்றியே தீபம் ஏற்றவேண்டும்.