< Back
ஆன்மிகம்
நலம் தரும் நவராத்திரி வழிபாடு... கொலு பொம்மைகள் வைக்கும் முறை
ஆன்மிகம்

நலம் தரும் நவராத்திரி வழிபாடு... கொலு பொம்மைகள் வைக்கும் முறை

தினத்தந்தி
|
1 Oct 2024 11:57 AM IST

கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

சிவபெருமானுக்கு உகந்த நாள் சிவராத்திரி. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்தது நவராத்திரி. நவம் என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி விரதம் இருந்து வழிபடுவதால் நவராத்திரி விழா எனப்படுகிறது. நவராத்திரியின் முதல் நாளிலேயே இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவார்கள்.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் முறையை துர்காஷ்டமி,சரஸ்வதி பூஜை, விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. விஜய தசமியுடன் நவராத்திரி விழா நிறைவு பெறும். இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது ஐதீகம். இந்த மூன்று தேவியரும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டின் நவராத்திரி விழா நாளை மறுநாள் (3-10-2024) தொடங்க உள்ள நிலையில், நவராத்திரியின் முக்கிய அம்சமான கொலு வைப்பது பற்றி பார்ப்போம்.

* கொலுப்படியில் பொம்மை வைப்பதற்கு முறை உள்ளது. மேலே உள்ள படியில் இறைவனின் பொம்மைகளை வைப்பார்கள். கீழிருந்து ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, ஐந்தறிவு, ஆறறிவு, ரிஷிகள், தெய்வங்கள் என்ற வரிசையில் பொம்மைகளை அடுக்கி வைத்து கொலுப் படிகளின் நடுவில் கலசம் வைக்கவேண்டும்.

* கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

* ஒன்பது படிகள் கொண்ட கொலுவாக இருந்தால், முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், பூண்டு, செடி, கொடி போன்ற தாவர வகைகளை வைக்க வேண்டும்.

* இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை வைக்கவேண்டும்.

* மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

* நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

* ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

* ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

* ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

கொலுப்படி மற்றும் பொம்மைகள் வைக்க இயலாதவர்கள் எளிமையாக, வீட்டில் உள்ள ஏதாவது ஒரு அம்மன் படத்தை வைத்து அதற்கு முறையாக பூஜைகள், நைவேத்தியங்கள் படைத்து எளிய முறையில் வழிபடலாம். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை பூஜை செய்ய வேண்டும். வீட்டிற்கு அக்கம் பக்கம், தெரிந்தவர்கள் மற்றும் விருந்தினர்களை அழைத்தது வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழம், தட்சிணை, சுண்டல் கொடுக்கலாம். இதுதவிர பரிசுப்பொருட்கள் அல்லது ரவிக்கை போன்றவற்றையும் அவரவர் தகுதி மற்றும் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.

மேலும் செய்திகள்