இது நம்ம வீட்டு விழா... பகவான் மீதான அன்பை வெளிப்படுத்தும் கிருஷ்ண ஜெயந்தி
|குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போன்றும், ராதை போன்றும் வேடமிட்டு அலங்கரித்து மகிழ்ச்சி அடைவார்கள்.
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பகவான் பூலோகத்தில் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார்.
கம்சனின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், 3 வயது வரை கோகுலத்தில் வளர்ந்தார். 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7 வயதில் கோபியர்களுடனும், 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.
இந்த காலகட்டங்களில் கிருஷ்ணர் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்ற பல அரக்கர்களை வதம் செய்துள்ளார். தன்னை கொல்வதற்காக தொடர்ந்து பகீரத பிரயத்தனம் செய்து தோற்றுப்போன, தாய்மாமன் கம்சனையும் வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டினார். அத்துடன், பல ஆண்டுகளாக கம்சனின் சிறையில் இருந்த, பெற்றோரான வசுதேவர்- தேவகி, பாட்டனார் உக்கிரசேனர் ஆகியோரை விடுவித்தார். பகவான் கிருஷ்ணர் தனது 10 வயதுக்குள் இத்தனை அசாதாரண செயல்களையும் செய்து முடித்துள்ளார்.
பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை கொண்டாடுவது அவரது பக்தர்களுக்கு அலாதி பிரியம். இது நம்ம வீட்டு விழா என்றே கொண்டாடுகிறார்கள். தங்கள் குழந்தையின் பிறந்த நாளை எப்படி சந்தோஷமாக கொண்டாடுவார்களோ, அதே போல் கிருஷ்ணரின் பிறந்தநாளையும் அன்போடும், சந்தோஷத்தோடும், தூய பக்தியோடும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
பகவான் கிருஷ்ணர் குழந்தைப் பருவத்தில் செய்த குறும்புத்தனங்களை எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கும். அதனை நினைவுபடுத்தும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி அன்று, பக்தர்கள் தங்களின் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போன்றும், ராதை போன்றும் வேடமிட்டு அலங்கரித்து மகிழ்ச்சி அடைவார்கள். பள்ளிகள், கலைக்கூடங்கள் மற்றும் கலைகளை கற்பிக்கும் இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகத்துடன் கொண்டாடப்படும். மாணவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். குழந்தைகளுக்கு கிருஷ்ணனைப் போல வேடமிட்டு தலையில் மயில் தோகையினால் ஆன கிரீடங்களை அணிவித்து கையில் புல்லாங்குழல் கொடுத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்வாறு கிருஷ்ணர் வேடமிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி 26-8-2024 அன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளை சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை அல்லது பூஜை செய்யக்கூடிய இடம் வரையில், பிஞ்சுக் குழந்தைகளின் காலடித் தடம்போன்று காலடிச் சுவடுகளை வரைவார்கள். இவ்வாறு வரைவதன்மூலம் கிருஷ்ணரே வீட்டிற்கு வந்திருப்பதாக ஐதீகம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அல்லது படத்திற்கு அலங்காரம் செய்து, கிருஷ்ணருக்கு பிடித்தமான நைவேத்யங்களை செய்து வழிபடவேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபடலாம். அதிக செலவு செய்து நைவேத்தியம் படைக்க முடியாதவர்கள், எளிமையாக முறுக்கு, சீடை மற்றும் சிறிது வெண்ணெய் ஆகியவற்றை படைக்கலாம். கிருஷ்ணரைப் பொருத்தவரை எதைக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, எத்தகைய தூய பக்தியுடன் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். தூய்மையான பக்தியுடன் தங்களால் முடிந்த நைவேத்தியம் செய்யலாம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கோவில்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்பது அன்றைய நாளை மகிழ்ச்சிகரமானதாக வைத்திருக்கும்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional