திருமலை, திருச்சானூரில் கோகுலாஷ்டமி விழா
|திருச்சானூரில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை உண்மையான துவாபரயுக புருஷர் ஸ்ரீ கிருஷ்ணராகக் கருதி ஆஸ்தானம் செய்யப்பட்டது.
இரவு 8 மணிக்கு ஸ்ரீ உக்ர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும், ஸ்ரீகிருஷ்ண சுவாமிக்கும் ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பின், துவாதசாராதனம் நடந்தது. கிருஷ்ணர் தங்க சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இன்று உறியடி உற்சவம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு திருவிழாவைக் காண தங்கத் திருச்சி வாகனத்தில் ஸ்ரீ மலையப்பசுவாமியும், மற்றொரு வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணசுவாமியும் திருமாட வீதிகளில் வலம் வருவார்கள்.
இதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மூலவர்களான ஸ்ரீ பலராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோருக்கு காலையில் சுப்ரபாதம், அபிஷேகம், மதியம் ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional