சதுர்த்தி கொண்டாட்டத்தின் நிறைவு நாள்.. விநாயகர் ஊர்வலம் தொடங்கியது
|விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மும்பையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பூஜை செய்யப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இது விசர்ஜனம் என அழைக்கப்படுகிறது.
வட இந்தியாவில் பொதுவாக 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறும். அதன்பின்னர் வளர்பிறை சதுர்த்தசியான அனந்த சதுர்த்தசி நாளில் விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் விசர்ஜன வைபவம் நடைபெறும். இது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் நிறைவாக கருதப்படுகிறது.
அவ்வகையில், அனந்த சதுர்த்தசியான இன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் விசர்ஜன வைபவம் நடைபெறுகிறது. பிரமாண்டமான விநாயகர் சிலை ஊர்வலங்களும் நடைபெறுகின்றன. தனிநபர்கள் காலை முதலே நேரடியாக நீர்நிலைகளுக்கு சென்று விநாயகர் சிலைகளை கரைக்கத் தொடங்கினர்.
குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இந்நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை மாநகரில் மட்டும் 24 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளான கிர்கான் சௌப்பட்டி, தாதர், பாந்த்ரா, ஜூஹு, வெர்சோவா, போவாய் ஏரி மற்றும் மத் தீவு போன்ற இடங்களில் டிரோன்கள் மூலம் வாகன போக்குவரத்து மற்றும் ஊர்வலங்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஏராளமான சி.சி.டி.வி. கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள கைரதாபாத்தில் பூஜை செய்யப்பட்ட 70 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. விநாயகர் பாடல்களை பாடியும், விநாயகரை போற்றியும் பக்தர்கள் முழக்கம் எழுப்பியபடி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். விநாயகர் சிலை ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்படும்.