அனந்த சதுர்த்தசி.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நாளையுடன் நிறைவு
|விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் விநாயகர் விசர்ஜனம் நிகழ்வு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாளில் நடைபெறும்.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பிறகு அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இது விசர்ஜனம் என அழைக்கப்படுகிறது.
நம் வீட்டிற்கு அழைத்து வந்து பூஜித்த விநாயகரை, நீர்நிலைகளில் கரைத்தால், அவர் தனது பெற்றோரிடம் சென்று சேர்ந்துவிடுவார் என்பது நம்பிக்கை. இவ்வாறு விநாயகரை அவரது பெற்றோரான சிவன் மற்றும் பார்வதி வசிக்கும் கைலாய மலைக்கு அனுப்பி வைக்கும் விநாயகர் விசர்ஜனம் நிகழ்வு, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நாளில் நடைபெறும்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெரும்பாலானோர் வீட்டில் வைத்து வணங்கும் விநாயகர் சிலையை, 3 அல்லது 5 தினங்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி தங்கள் வசதிக்கு ஏற்ப விநாயகர் சிலைகளை கரைத்தனர். சென்னையில் நேற்று விநாயகர் ஊர்வலம் பெரிய அளவில் நடைபெற்றது.
வட இந்தியாவில் பொதுவாக 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறும். அதன்பின்னர் வளர்பிறை சதுர்த்தசியான அனந்த சதுர்த்ததி நாளில் விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் நிறைவை விநாயகர் விசர்ஜன வைபவம் குறிக்கிறது. அனந்த சதுர்த்தசியானது, 10 நாள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் கடைசி நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டு வளர்பிறை சதுர்த்தசி நிதி இன்றும் நாளையும் இருப்பதால் இரண்டு நாட்களும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். குறிப்பாக, வட இந்தியாவில் பஞ்சாங்கப்படி, விநாயகரை விசர்ஜனம் செய்து (நீர்நிலைகளில் கரைத்தல்) வழியனுப்பும் நாள் செப்டம்பர் 17 என கணிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாங்கத்தின்படி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி இன்று (16.9.2024) திங்கட்கிழமை பிற்பகல் 1:31 மணி முதல் நாளை (17.9.2024) செவ்வாய்கிழமை காலை 11:21 மணி வரை உள்ளது. எனினும், உதய திதியின்படி, நாளை (17.9.2024) அனந்த சதுர்த்தசி திதியாக கருதப்பட்டு விநாயகர் விசர்ஜனம் செய்யலாம்.
அனந்த சதுர்த்தசி என்பது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த தினம் ஆகும். இந்த நாளில்தான் மகாவிஷ்ணு, ஆதிசேஷன் மீது அனந்த சயனம் கொண்டு காட்சி தந்ததாக ஐதீகம். அனந்தா அல்லது ஆனந்தா என்பது முடிவில்லாத அல்லது எல்லையில்லாத என்று பொருள். அளவற்ற நன்மைகளையும், ஆனந்தத்தையும் தரக்கூடிய விரதம் ஆனந்த பத்மநாப விரதமாகும். எனவே, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், விநாயகர் விசர்ஜனுக்கு இந்த நாள் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.
மும்பை உள்ளிட்ட இடங்களில் நாளை மிக பிரமாண்டமான அளவில் விநாயகர் ஊர்வலம் நடைபெறும். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.