விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
|சென்னையில் மூன்று நாட்கள் விநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை, பாரம்பரிய வழக்கப்படி நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர். பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபட்ட விநாயகர் சிலைகளும் ஆங்காங்கே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.
ராமேஸ்வரத்தில் முக்கிய இடங்களில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன. தங்கச்சிமடம், பாம்பன், மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னையில் செப்டம்பர் 11, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் 15-ந்தேதி அன்று பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையைப் பொருத்தவரை பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.