நாளை மறுநாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்... ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதால் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் (4-10-2024) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12-ம் தேதி வரை வரை விழா நடைபெறுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடைபெற்றது. இதையொட்டி காலையில் மூலவருக்கு நித்திய பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் சன்னதி வெள்ளை நிறப்பட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டது. பின்பு பச்சை கற்பூரம், கிச்சிலி கிழங்கு, திருச்சூரணம், கஸ்தூரி மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் ஆன பரிமளம் எனப்படும் கலவை, கோவில் வளாகத்தில் உள்ள சுவர்கள், கூரைகள், தூண்கள் மற்றும் வளாகம் முழுவதும் உள்ள விக்கிரகங்கள், பூஜை பாத்திரங்கள் அனைத்திலும் தௌிக்கப்பட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
காலை 6 மணி முதல் 10 மணி வரை இந்த பணி நடைபெற்றது. 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார் திருமஞ்சன தூய்மை பணிகளை முன்னிட்டு அஷ்டதள பாத பத்மாராதனை மற்றும் வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.