< Back
ஆன்மிகம்
ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்பட்டது
ஆன்மிகம்

ஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்பட்டது

தினத்தந்தி
|
7 Oct 2024 5:27 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பெருமாள் அணிவதற்காக கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு எழுந்தருளி காட்சி அளிக்கும் ஆண்டாள் அணிந்த மாலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு, புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை அன்று பெருமாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று மதியம் 2 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு திருப்பதி ஏழுமலையானுக்கு கொண்டு செல்லப்படும் மாலையை அணிந்து ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதையடுத்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி ஆகியவை ஒரு கூடையில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் மாலை இருந்த கூடையை, மாட வீதிகள் வழியாக யானை முன்னே செல்ல வலம் வந்து மீண்டும் கோவிலில் இருந்து கார் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளன்று கருட சேவையின் போது ஏழுமலையான், ஆண்டாள் சூடிய மாலையை அணிந்துகொண்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுதோறும் ஆண்டாள் மாலை, கிளி ஆகியவை கிளி நார் கூடையில் வைத்து திருப்பதிக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் இந்த ஆண்டு பக்தர் ஒருவர் வழங்கிய வெள்ளிக் கூடையில் வைத்து மாலை உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்