வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க... கிருஷ்ணரின் அருள் கிடைக்க ஆண்டாள் அருளிய பாசுரம்
|நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் பாடியருளியுள்ளார்.
பகவான் கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி நாளை (26.8.2024) கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணர், நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் ஆகும். எனவே, இந்த நன்னாளில் அன்று வீடுகளை சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை அல்லது பூஜை செய்யக்கூடிய இடம் வரையில், பிஞ்சுக் குழந்தைகளின் காலடித் தடம்போன்று காலடிச் சுவடுகளை வரைவது வழக்கம். இவ்வாறு வரைவதன்மூலம் ஆலிலை கண்ணன், தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வந்திருப்பதாக ஐதீகம்.
இவ்வாறு வீட்டிற்கு வந்த கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபடலாம். அதிக செலவு செய்து நைவேத்தியம் படைக்க முடியாதவர்கள், எளிமையாக முறுக்கு, சீடை மற்றும் சிறிது வெண்ணெய் ஆகியவற்றை படைக்கலாம்.
நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.
'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவா நின்றனவும்
தீயினுள் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்'
பகவான் கிருஷ்ணரை தூய்மையான உடல் உள்ளத்துடன், அவன் திருவடிகளில் தூய மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனைப் போற்றிப் பாடி, சிந்தையில் அவனை மட்டுமே நிறுத்தி நாம் தியானித்தோமானால் நாம் அறிந்து செய்த பாவங்களும், அறியாமல் செய்யவிருக்கும் பாவங்களும் நெருப்பில் இட்ட துசு போன்று தடயமின்றி அழிந்து போய்விடும் என ஆண்டாள் கூறியிருக்கிறார். எனவே, கிருஷ்ணரின் அவதார தினத்தில் இப்பாசுரத்தை பாடி வழிபடுவது சிறப்பு.