விநாயகருக்கு செய்யும் அபிஷேகங்களும் பலன்களும்
|மதுரை பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
விநாயகப் பெருமானுக்கு அபிஷேகப் பொருட்கள் எல்லாம் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒருசில அபிஷேகங்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்து செய்யப்படுகின்றன. அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.
பாலாபிஷேகம்: வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலா பிஷேகம் செய்தால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சந்தன அபிஷேகம்: செஞ்சேரிமலை என வழங்கப்படும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்புத்தரும்.
தேனாபிஷேகம்: திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பட்ட விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர், இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக்காணலாம்.
திருநீற்று அபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகிறார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி, அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் நிறைவேறும்.
கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருக சீரிடம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும். அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.
சொர்ணாபிஷேகம்: திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய, செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.