மாங்கல்ய பலன் கிடைக்க அருள் புரியும் மணக்கால் சப்த கன்னியர்
|மணக்கால் சப்த கன்னியர் கோவிலில், நவராத்திரியின் பத்தாம் நாளில் தயிர்ப்பாவாடை எனும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அற்புதமாக கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.
பொதுவாகவே, சிவாலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் பலவற்றிலும் சப்தமாதர்கள் (சப்தகன்னியர்) சந்நிதி கொண்டிருப்பார்கள். சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். சப்த மாதர் ஆலயமும் வடக்கு நோக்கியே இருக்கும். ஆனால் மணக்கால் சப்தமாதர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு. இந்த கோவிலை கவுமாரி அம்மன் கோவில் என்றும், நங்கையார் கோவில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்.
கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் மதுரை வீரன் சன்னதி உள்ளது. அர்த்தமண்டப நுழைவாயிலின் இருபுறமும் பிரமாண்டமான துவார பாலகிகளின் திருமேனிகள் அமைந்துள்ளன. கருவறையில் கவுமாரி மற்றும் சப்தமாதர்கள் எழுந்தருளி உள்ளனர்.
ஊருக்கு காவலாக போற்றப்படுகிற இந்த ஆலயம், சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறது ஸ்தல வரலாறு. மணக்கால் நங்கையார் அம்மன் கோவிலுக்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகித்து போற்றுகின்றனர் ஊர்மக்கள். பிரகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்தபடி காட்சி தரும் கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம். கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும் என்கிறார்கள்.
குடும்பத்தில் இருந்த குழப்பமும் பிரிவினைகளும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்! தெற்குப் பிரகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு இந்த தலத்தில் வெகு பிரசித்தம். அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள். இந்த பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
மாங்கல்ய பலன் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்க, வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்சனைகள் நீங்க, கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்க, பிரிந்த தம்பதி ஒன்றுசேர நங்கையார் அம்மனும் சப்தமாதர்களும் அருள்புரிகிறார்கள்.