திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 365 நாட்களில் 450 திருவிழாக்கள்
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 365 நாட்களில் 450-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலியுகத்தின் பிரபஞ்ச அதிபதியான வெங்கடாசலபதியின் உறைவிடமான திருமலை, புனித யாத்திரைகள் மற்றும் விழாக்களால் எப்போதும் கலகலப்பாக இருக்கும். திருமலையில் ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழாவாகும். அது 'நித்ய கல்யாணம்-பச்சதோரணம்' என விவரிக்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. ஆனால், திருமலையில் ஆண்டு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன என்றால் மிகையாகாது. இந்த திருவிழாக்கள் நித்யோற்சவம் (தினமும்), பக்சோற்சவம் (பதினைந்து வாரங்கள்), மாசோற்சவம் (மாதாந்திரம்), சம்வோற்வம் (ஆண்டு தோறும்), நட்சத்திரத் திருவிழாக்கள் (பிறந்த நட்சத்திரங்களின் அடிப்படையில்) என வகைப்படுத்தப்படுகின்றன.
தினசரி உற்சவங்களில் சுப்ரபாதம், தோமாலை, சஹஸ்ர நாமார்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனம், பூளங்கி, சுக்ரவார அபிஷேகம், ரோகிணி, ஆருத்ரா, புனர்வசு, சிரவணம் போன்ற நட்சத்திர விழாக்கள் அனுசரிக்கப்படும். மேலும் மத்ஸ்ய, கூர்மம், வராஹம், நரிசிம்மர், வாமனன், பரசுராமன், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி-தசாவதாரங்கள் போன்ற ஜெயந்திகளும், வெங்கடாசலபதிக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மகான்களின் திருநட்சத்திரத் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
உகாதி ஆஸ்தானம், தெப்போற்சவம், பத்மாவதி பரிணய உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், ஆனிவார ஆஸ்தானம், ரத சப்தமி, வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் வரிசையாக சில வருடாந்திர திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. வருடாந்திர பிரம்மோற்சவங்கள் மிக முக்கியமான சமய விழாவாகக் கருதப்படுகிறது. இது, வாகனச் சேவைகளில் 5-வது இரவில் கருட சேவையுடன் ஆண்டுக்கு 9 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வருகை தந்து, சாமி தரிசனம் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் வீதிஉலா வரும் வாகனச் சேவையை கண்டு தரிசனம் செய்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.