< Back
சிறப்பு பேட்டி
குடும்பமோ, குழந்தையோ... தொழில்முறை வாழ்க்கையை அது ஏன் மாற்ற போகிறது? நடிகை ஆலியா பட்டின் சுவாரசிய பேட்டி
சிறப்பு பேட்டி

குடும்பமோ, குழந்தையோ... தொழில்முறை வாழ்க்கையை அது ஏன் மாற்ற போகிறது? நடிகை ஆலியா பட்டின் சுவாரசிய பேட்டி

தினத்தந்தி
|
28 July 2022 9:15 AM IST

நடிகை ஆலியா பட் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் எடுக்கும் முடிவுகளில் உள்ளுணர்வு மற்றும் தைரியம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் என கூறுகிறார்.




புதுடெல்லி,



நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட்டின் 5 ஆண்டு காதல் கடந்த ஏப்ரல் 14ந்தேதி புது வருட தினத்தன்று திருமணத்தில் முடிந்தது. தனது குடும்பத்தில் புது வாரிசு ஒன்று வர இருக்கிறது என ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில், பெண் சிங்கம், குட்டியுடன் ஒன்றாக இருக்கும் ஆண் சிங்கம் புகைப்படம் ஒன்றை கடந்த ஜூனில் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதனுடன், கர்ப்பம் அடைந்திருக்கும் தகவலையும் வெளியிட்டார்.

இதனையடுத்து, அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். நடிகை ரகுல் பிரீத் சிங், இயக்குனர் கரண் ஜோகர் உள்ளிட்ட திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். எனினும், சிலர் வேறு விமர்சனங்களையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு பெண் செய்யும் ஒவ்வொரு செயலும் தலைப்பு செய்தியாக வந்து விடுகிறது. அந்த பெண் தாயாக முடிவு செய்து விட்டாலோ, புதியவர்கள் யாருடனாவது டேட்டிங் சென்றாலோ, ஒரு கிரிக்கெட் போட்டியை காண சென்றாலோ அல்லது ஒரு விடுமுறை நாளை கழிக்க சென்றாலோ கூட அவர் கவனிக்கப்படுகிறார்.




ஏதோ சில காரணங்களுக்காக, பெண்ணின் விருப்பம் என்ன என்பது பற்றியே அவர்கள் மீது கண்கள் பதிகின்றன என அவர் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் முதன்முறையாக தடம் பதித்துள்ள ஆலியா, ஹார்ட் ஆப் ஸ்டோன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு லண்டன் நகரில் நடந்தபோது, தனது கர்ப்பம் பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்டார். இதனால், தொழிலின் உச்சத்தில் இருக்கும்போது, வாழ்க்கையை மாற்ற கூடிய ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என அவரை பற்றிய விமர்சனங்கள் எழுந்தன.




அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஆலியா, ஆம். நான் இளமையிலேயே தாயாகிறேன். ஆனால், இதனால் வேறு ஏதேனும் மாற போகிறதா? எனது தொழில் சார்ந்த வாழ்க்கையை, ஒரு குடும்பமோ அல்லது ஒரு குழந்தையோ ஏன் மாற்ற போகிறது? அவை முற்றிலும் இரண்டு வேறுபட்ட விசயங்கள். முட்டாள்தனம் வாய்ந்த விசயத்தில் எந்தவொரு கவனமும் செலுத்துவதற்கு பதிலாக, இதனை தொடர்ந்து செயல்படுத்தி, ஓர் எடுத்துக்காட்டாக நான் இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இதுபோன்ற எண்ணங்களை கொண்டிருக்கும் மக்கள், வாழ்க்கையில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என எடுத்து காட்டுகிறதே தவிர, நான் எங்கிருக்கிறேன் என்பது பற்றி எதுவும் எடுத்து காட்டவில்லை என்றே நான் எடுத்து கொள்வேன். உண்மையில், எனது வாழ்வில் நான் எடுத்த நிறைய முடிவுகள் என்னால் தனித்தே எடுக்கப்பட்டு உள்ளன. அதற்கு, வேறு எந்தவொரு நபருக்கும் தொடர்பும் கிடையாது என ஆலியா கூறுகிறார்.

அவர் கூறும்போது, நீங்கள் பெரிய விசயங்களை எல்லாம் திட்டமிட முடியாது. அதுவாகவே நடைபெறும் என கூறியுள்ளார். என் மனம் என்ன கூறுகிறதோ அதனை பின்பற்றவே மனசார விரும்புகிறேன். எனது உள்ளுணர்வு மற்றும் தைரியத்தின்படியே செயல்படுகிறேன். இதனையே எனது தொழில் சார்ந்த மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்துள்ளேன். இதனால், விசயங்கள் மிக அழகாகவே நடந்துள்ளன என கூறுகிறார்.

ஆலியாவின் கர்ப்பம் பற்றி சமூக ஊடகத்தில் பல்வேறு விமர்சனங்கள் வெளிவருகின்றன. இந்த வயதிலேயே ஏன் இந்த முடிவு? என்பன போன்ற பல விசயங்களும் குறிப்பிடப்படுகின்றன.




இதுபற்றி அவர் கூறும்போது, பல்வேறு தளங்களில் தனக்கு ஆதரவாக முன்பின் அறிமுகம் இல்லாத பலர் வருகின்றனர். இதனால், சமூகத்தில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன என்பது பற்றிய விழிப்புணர்வு தனக்கு ஏற்பட்டு உள்ளது என அவர் கூறுகிறார்.

நாம் இப்போது 2022ம் ஆண்டில் இருக்கிறோம். அதனால் மக்கள் கேள்வி கேட்கின்றனர். என்னை பற்றிய சில கட்டுரைகளின் மீது மக்கள் சிலர், உங்களுக்கு என்ன பிரச்சனை? அவரை அவராகவே இருக்க விடுங்கள் என பதிவிட்டு உள்ளனர்.

இது தானாகவே நடக்கிறது (மாற்றங்கள்) என நான் உணர்கிறேன். உண்மையில், இதன்மீது ஒருவர் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்று கூறி முடிக்கிறார்.

நடிகை ஆலியா பட் கடைசியாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண் ஒருவர் எதிர்கொள்ளும் வாழ்வியல் சார்ந்த நடைமுறைகளை விளக்கும் கங்குபாய் கத்தியாவடி என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். ஆர்.ஆர்.ஆர். படத்தில் சீதா வேடம் ஏற்று அவர் நடித்திருந்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அவர் அடுத்து, பிரம்மஸ்திரா பாகம் 1 சிவா என்ற படத்தில் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஆலியா பட் அடுத்து, டார்லிங்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது ஆகஸ்டு 5ந்தேதி நெட்பிளிக்சில் வெளியாகிறது. இதில் ஆலியாவுடன், ஷெபாலி ஷா, விஜய் வர்மா மற்றும் ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வழியே, எடர்னல் சன்ஷைன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில், நடிகை ஆலியா பட் தயாரிப்பாளராகவும் ஆகியுள்ளார்.

மேலும் செய்திகள்