"படம் 'ஹிட்' ஆகுறதும், 'பிளாப்' ஆகுறதும் ஹீரோ கையில் இல்லை'' - விக்ரம் பிரபு 'பளிச்' பேட்டி
|தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளும் களமிறங்குவது புதிதல்ல. வாரிசு என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும், தனது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தனக்கென தனி இடம் உருவாக்கி கொண்டவர்களும் இருக்கிறார்கள். அப்படி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி, வித்தியாசமான படங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார், விக்ரம் பிரபு.
கலைத்தாயின் மூத்த மைந்தன் என புகழப்படும் 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசனின் பேரனும், 'இளைய திலகம்' பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு 'கும்கி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படமே புகழையும், விருதுகளையும் அள்ளிக்கொடுத்தது. அதனைத்தொடர்ந்து 'இவன் வேற மாதிரி', 'சிகரம் தொடு', 'அரிமா நம்பி', 'வாகா', 'புலிக்குத்தி பாண்டி', 'டாணாக்காரன்', 'பொன்னியின் செல்வன்' என வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 'தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்கு விக்ரம் பிரபு மனம் திறந்தார். அதன் விவரம் வருமாறு:-
தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'ரெய்டு' படம் என்ன மாதிரியான கதையம்சம் கொண்டது?
இது எனது முதல் ரீமேக் படம். பக்கா போலீஸ் ஆக்ஷன்-திரில்லர் படம்.
தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து சினிமாவுக்கு வந்த உங்களுக்கு பொறுப்பு கூடியதாக நினைக்கிறீர்களா?
பொறுப்பு என்பதே ஒரு விதத்தில் சுமை தானே... 'தாத்தா சாதிச்சது பெரிய ஆலமரம் போல... அந்த ஆலமரத்தோட நிழலில் இருந்து நீ கையை மட்டும் நீட்டுவதே கஷ்டம். அந்தளவு தான் நானே செஞ்சுருக்கேன். உன்னால அதை செய்ய முடிஞ்சா நல்லது', என்று அப்பா என்கிட்ட சொல்வாரு. காலங்கள் மாறியிருச்சு... படங்களும், ரசிகர்களோட மனநிலையும் மாறிடுச்சு... அதுக்கேத்தமாதிரி நானும் சில விஷயங்களை மாத்தணும். அதில் உறுதியா இருக்கேன்.
படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பை வழங்க முடிகிறதே, எப்படி?
பிடிச்ச விஷயத்தை செய்வது பலம். ஒரு விஷயத்துல சக்சஸ் கிடைச்சாலும், அதே இடத்துல நான் நிக்க மாட்டேன். ஸ்டைல் ஆப் ஸ்கிரிப்ட்ட மாத்திக்கிட்டே இருக்கேன். சில நேரத்துல அது சோதனை முயற்சியா அமைஞ்சு போயுடுது.
இது நிர்பந்தமா? எச்சரிக்கைஉணர்வா?
சினிமாவை பொறுத்தவரையும் எல்லா வகையிலும் நாம எண்டர்டெயின் பண்ணலாம். ஒரு விஷயம் நல்லாயிருக்குனு யாராவது சொன்னாலும், புதுசா ஏதாவது செய்யலாம்னு நகர்ந்துகிட்டே இருப்பேன்.
உங்கள் நடிப்பில் வெளியாகவுள்ள 'இறுகப்பற்று' படம் பற்றி சொல்லுங்களேன்...
கணவன் - மனைவி இடையே உணரவேண்டிய, புரிதலுக்கான படம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான படம். இந்த மாதம் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஒரு படத்தின் வெற்றிக்கு யார் காரணம்?
'டாணாக்காரன்', 'புலிக்குத்தி பாண்டி' படங்கள் ஓ.டி.டி.யில் தான் ரிலீஸ் ஆச்சு. ஆனாலும் அதெல்லாம் 'ஹிட்' ஆச்சு. ஆடியன்ஸ் சப்போர்ட் இருந்துச்சு... என்னை பொறுத்தவரை ஒரு படம் ஹிட் ஆகுறதும், பிளாப் ஆகுறதும் ஹீரோ கையில் இல்லை. டைரக்டர் கையில் தான் இருக்கு. சொன்ன வேலையை சரியா முடிச்சு கொடுக்குறது தான் நம்ம வேலை. ஒரு படத்துக்கு டீமா வேலை செஞ்சுட்டு, ஹீரோ மட்டும் நல்ல பேரு வாங்கிட்டு போறது எனக்கு பிடிக்காது.
'கிசுகிசு'வில் சிக்காமல் இருக்கீங்களே... எப்படி?
(சிரிக்கிறார்) இருக்கிற வேலையவே பாக்க முடியல... நேரமில்ல. இதுல நான் எங்க 'கிசுகிசு'ல மாட்டுறது. மைண்ட் கரெக்டா இருந்துச்சுன்னா எல்லாமே கரெக்டா இருக்கும். தாத்தா, அப்பாவ பாத்து வளர்ந்தவன் நான். எனவே அவங்க சம்பாதிச்சு வச்ச பெயர காப்பாத்தனும்னு ரொம்ப கவனமாக இருக்கேன்.
மனதளவில் வேதனைப்பட்ட சம்பவம் ஏதாவது இருக்கிறதா?
நான் நடிச்ச ஒரு படத்துல திரைக்கதையவே மாத்திட்டாங்க... என்கிட்ட கதை சொன்னப்போ இருந்த திரைக்கதை, ரிலீஸ் ஆனப்போ வேற மாதிரி இருந்துச்சு... இது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... ஒரு படம் பிளாப் ஆகுறப்போ... சிம்பிளா ஹீரோ மேல பழிய போட்டுட்டு போயிடுறாங்க... இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்.
எதை இலக்காக கொண்டு உங்களது சினிமா பயணம் இருக்கிறது?
சரியோ தப்போ... தெரிஞ்ச ரூட்ல மட்டும் போகாம, எல்லா ரூட்லயும் போய் பாக்கணும்னு தான் ஆசை. அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கேன். ஜெயிக்கிறமோ, தோக்குறமோ நம்ம வேலையை கரெக்டா செஞ்சிட்டு போய்க்கிட்டே இருக்கணும்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது?
ஒரு நல்ல வரலாற்று சப்ஜெக்ட் படத்தில் நடிக்கனும்னு ஆசை இருந்துச்சு. 'துப்பாக்கி முனை' படத்தில் 45 வயதானவர் வேஷத்துல நடிச்சேன். தாத்தாவும், அப்பாவும் நடிக்கும்போது அவங்களோட ரோல் பத்தி தான் யோசிப்பாங்களே தவிர, வயசெல்லாம் பாத்ததில்ல. அதே மாதிரி தான் நானும்.
தாத்தா சிவாஜிகணேசன், அப்பா பிரபு நடித்த படங்களில் பிடித்த படம் என்ன?
தாத்தா நடிப்பில் 'தெய்வ மகன்'. அப்பா நடிப்பில் 'சின்னத்தம்பி', 'அக்னி நட்சத்திரம்'.
அவர்களது படங்களை ரீமேக் செய்து நடிக்க விருப்பம் உண்டா?
விருப்பம் இருந்தாலும் அது மிகவும் கடினம். சவாலும் கூட.
தாத்தா - அப்பாவுடன் சூட்டிங் போன அனுபவம் பற்றி...
தாத்தா கூட சூட்டிங் போயிருக்கேன். ஆனா எனக்கு அப்போ அதை 'நோட்டிஸ்' பண்ண தெரியல. ஆனால் அப்பா கூட 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்போ, அப்பாவோட நடிப்ப பாத்து பிரமிச்சு போய் அப்படியே பாத்துக்கிட்டே இருந்தேன். குறிப்பா குதிரை மீது உக்காந்துகிட்டு கோட்டை மேல இருக்குற பார்த்திபன்கிட்ட அப்பா பேசுவாரே... அந்த சீன்ல கலக்கி இருப்பாரு. அதேபோல அவர் முன்னாடி நான் நடிக்கும்போது கொஞ்சம் உதறலா இருந்துச்சு.
ஒரு படத்தில் நடிக்க தவறவிட்டு, பின்னர் வருத்தப்பட்ட சம்பவம் உண்டா?
அப்படி எதுவும் இதுவரை நடக்கல.
முதல் காதல் பற்றி...
என் மனைவி மட்டுமே... (சத்தியம் செய்கிறார்)
ஓ.டி.டி.யின் வளர்ச்சி சினிமாவை பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?
நான் அப்படி நினைக்கல. ஓ.டி.டி.யே, சினிமாவின் ஒரு பார்ட் தான். சினிமாவுக்கு போற ஆடியன்ஸ்னு ஒரு பெருங்கூட்டமே இருக்கு. அவங்கள என்ன செஞ்சாலும் மாத்த முடியாது. இந்த படத்தை கொஞ்சம் பொறுமையாக பாத்துக்கலாமேனு ஒரு எண்ணம் ஓ.டி.டி.ல இருக்கும். ஆனால் சினிமால இருக்கும் மோகம் போகாது. ஓடாத படங்களுக்கு ஓ.டி.டி. ஹெல்ப் பண்ணுது. இதுல குறை சொல்ல என்ன இருக்கு?
நடிக்கும் படங்களின் கதை தேர்வு பற்றி அப்பாகிட்ட ஆலோசனை கேட்பீங்களா?
நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் நானே செஞ்சுக்குவேன். அதுக்கான தைரியத்தை அப்பா சொல்லிக்கொடுத்து இருக்காரு...
அப்பாவிடம் வாங்கிய மறக்க முடியாத திட்டு...
ஸ்கூல் டைம்ல சரியாக படிக்காம கொஞ்சம் திட்டு வாங்கியிருக்கேன். ஓரளவு வளர்ந்துட்ட பிறகு அப்பா என்ன திட்டுறது கிடையாது.
நீங்கள் நடித்த படங்களில் சவாலாக அமைந்த படம் எது?
சந்தேகமே இல்ல, 'டாணாக்காரன்' தான். மொட்டை வெயில்ல சூட்டிங் நடந்துச்சு. வியர்வையே காஞ்சு போகும் அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்துச்சு... இதனால அப்பப்போ 'ஸ்பிரே' அடிச்சு நடிச்சோம். தவறி விழுந்தாகூட கை, கால் உடஞ்சுடும் அளவுக்கு அந்த கிரவுண்ட்ல பாறைகள் இருந்துச்சு. வேலூரில் ஏப்ரல்-மே-ஜூன்ல சூட்டிங்னா பாத்துக்கோங்களேன்.
உங்களை பற்றிய விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒருத்தரோட மனச காயப்படுத்தாம என்ன வேண்டுமானாலும் விமர்சனங்கள் செய்யலாம். தப்பில்ல. சோசியல் மீடியா எதுனால இப்போ பேமஸ் ஆகிட்டு இருக்கு தெரியுமா... அவனவனுக்கு இருக்குற வயிற்றெரிச்சலை கொட்டி செய்திகள் போடுறாங்க... அதை பாக்க மக்களும் ஆர்வமா இருக்காங்க. நெகட்டிவ் விஷயங்களைத் தான் ஆர்வமா பாக்குறாங்க. அதுதான் காரணம்.
தாத்தாவுக்கு சரியான ஜோடி யார்?
பத்மினியை சொல்வேன். ஆனால் அப்பாவுக்கு அனைத்து கதாநாயகிகளும் பொருத்தமாக இருப்பார்கள்.
இவ்வாறு கலகலப்பாக முடித்தார், விக்ரம் பிரபு.