''மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதில் பிரச்சினை இல்லை''நடிகை தமன்னா 'பளிச்' பேட்டி
|'மில்கி பியூட்டி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தமன்னா, ரஜினிகாந்துடன் நடித்த 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 'காவாலா' பாடலில் அவரது துள்ளல் நடனம் அவரது இமேஜை இன்னும் உயர்த்திவிட்டது. தமன்னாவின் மனம் திறந்த பேட்டி இங்கே..
இன்னும் இளமை மாறாமல் இருக்கிறீர்களே...
எல்லாம் கடவுள் ஆசிர்வாதம்.
சினிமாவில் மொழி-மாநிலம் என்ற எல்லைகள் ஓய்ந்துவிட்டதாக கருதுகிறீர்களா?
தமிழ் படங்களை தெலுங்கு மக்களும், தெலுங்கு படங்களை தமிழ் மக்களும் ரசிக்கிறார்கள். ஏன், தென்னிந்திய படங்களை வட இந்திய மக்களும் தற்போது ஆதரிக்கிறார்கள். ரசித்துப் பார்க்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி படம் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, தற்போது இந்திய சினிமா என்று சொல்லும் நிலைக்கு சென்று இருக்கிறோம். இது நல்ல வளர்ச்சி தானே...
தமிழில் ரஜினிகாந்த், தெலுங்கில் சிரஞ்சீவி என்ற இருபெரும் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
இருவருமே இந்த நாட்டில் மிகப்பெரிய ஸ்டார்ஸ். அவர்களுடன் நடித்தது பெரிய சாதனை. இதன் மூலம் என் கனவு நிறைவேறியது போல் உள்ளது..
சீனியர் நடிகர்களுடன் நடிக்க தயக்கம் இல்லையா?
என் சினிமா பயணத்தில் அனைத்து விதமான நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறேன். நான் எப்போதுமே என்னுடன் நடிக்கும் நடிகர்களின் வயதை பற்றி கண்டுகொள்ள மாட்டேன். நடிகர்களை, நடிகர்களாக மட்டுமே பார்க்கிறேன். எனது கதாபாத்திரம் எப்படி இருக்கிறது? அது ரசிகர்களுக்கு பிடிக்குமா, இல்லையா? என்பது தான் எனக்கு முக்கியம். கதாபாத்திரம் பிடித்திருந்தாலே போதும். வயது வரம்பினால் எதுவும் மாறாது.
இத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து முன்னணி நடிகையாக கோலோச்சுவதின் ரகசியம் என்னவோ?
சினிமாவை ஒரு ரேஸ் என்று நான் பார்க்க மாட்டேன். சிறு வயதிலேயே நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். வெற்றி, தோல்வி என்பது நம் கையில் இல்லை. கூட்டு முயற்சி தான் முக்கியம். சில வெற்றிகளுக்கு நான் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதை யோசித்து பெருமை கொள்ளக்கூடாது. சினிமாவில் முன்னுக்குச் செல்ல வேண்டும் என்றால் கடின உழைப்பு அவசியம். அதை நோக்கியே எனது சினிமாப் பயணம் இருக்கிறது.
தமன்னாவா இது? என்று யோசிக்கக்கூடிய சவாலான கதாபாத்திரத்திலும் நடிக்கிறீர்கள். எதனால் இந்த 'திடீர்' மாற்றம்?
எல்லாத் துறையிலும் மாற்றம் சகஜம். நாம் மாறாவிட்டால், எங்கே ஆரம்பித்தோமோ அங்கேயே நின்றுகொண்டிருக்க தான் வேண்டும். அப்படி நின்று விட யாரும் ஆசைப்பட மாட்டார்கள். வளர்ச்சியைத் தான் விரும்புவார்கள். அதற்கு புதிய முயற்சிகளை கையாள வேண்டும். அப்போது தான் இந்தப் பயணம் இன்னும் நீளும்.
'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' வெப் தொடரில் நடித்த அனுபவம் பற்றி...
அந்தப் படம் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். முக்கியமாக ரசிகைகளும் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்களை பற்றிய கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
யாரோ ஏதோ பேசுகிறார்கள். ஏதோ நினைத்துக் கொள்கிறார்கள். எனவே அதுபற்றியெல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது.
உங்கள் காதலர் விஜய் வர்மாவுடன் எப்போது 'டும்... டும்... டும்...?'
இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை. அப்படி திட்டமிட்டதும் முதலில் உங்களுக்குத் தான் சொல்வேன்.
'போலா ஷங்கர்' தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்தது பற்றி...
கீர்த்தி சுரேஷ் மிகச் சிறந்த நடிகை. அனைத்து எமோஷனல்களையும் நேர்த்தியாக கையாளுகிறார். அவரோடு இணைந்து பணியாற்றியதை மகிழ்ச்சியாகவே உணருகிறேன்.
உங்களுக்கு போட்டி நடிகை என்றால் அது யார்?
நான் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சினிமா மீதான பக்தி, எனது ஒழுக்கம், அர்ப்பணிப்பு தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. நான் சக கதாநாயகிகளை போட்டியாகவே நினைக்கவில்லை. அனைவரும் எனது தோழிகள் தான்.
ரசிகர்களுக்கு உங்களது சுதந்திர தின வாழ்த்து என்ன?
பல தியாகங்களுக்குப் பிறகு நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை பேணி காத்து, ஒற்றுமையாக வாழவேண்டும். இந்த சிறப்பு நாளில், புதிய கனவுகள் நனவாகட்டும். நாடு தேசபக்தியால் நிரம்பட்டும்.