< Back
சிறப்பு பேட்டி
நிஜ வாழ்க்கையில் எனக்கு மாமா குட்டிகள் கிடையாது - மனம் திறக்கிறார் லவ் டுடே நாயகி இவானா
சிறப்பு பேட்டி

"நிஜ வாழ்க்கையில் எனக்கு 'மாமா குட்டிகள்' கிடையாது" - மனம் திறக்கிறார் 'லவ் டுடே' நாயகி இவானா

தினத்தந்தி
|
20 July 2023 12:24 PM IST

‘லவ் டுடே’ படத்தில் வந்தது போல, நிஜ வாழ்க்கையில் இவானாவுக்கு ‘மாமாகுட்டிகள்’ இருக்கிறார்களா...? இல்லவே இல்லை. அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும். இதற்கும் புருவத்தை உயர்த்தி யோசிக்காதீங்க... பிளீஸ்... (சிரிப்புடன்)

இவானா என்றால் தெரியாத இளசுகளே இல்லை என்ற அளவுக்கு பிரபலம் அடைந்திருக்கிறார், 'லவ்டுடே' நாயகி. கேரள மாநிலம் ஆலுவா மாவட்டத்தில் பிறந்த 'அல்வாகுட்டி'யான இவானா, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவரை தமிழில் 'நாச்சியார்' படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர், இயக்குனர் பாலா.

காதலர்களிடையே செல்போன் பரிமாற்றத்தால் ஏற்படும் சிக்கலை மையப்படுத்தி கடந்த ஆண்டு வெளியான 'லவ் டுடே' படம் இவானாவை பிரபலப்படுத்தி விட்டது. 'இவானா இருந்தா போதும், வேற யாரும் வேணாம்' என்று சொல்லும் வகையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறது. படங்களில் பிசியாக நடித்து வரும் இவானாவை சந்தித்தோம். அலட்டல் இன்றி வரவேற்ற அவர், 'தினத்தந்தி'க்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

இவானாவின் மனம் திறந்த பேட்டி வருமாறு:-

நடிகையாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போது வந்தது?



நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததில்லை. பிளஸ்-2 முடித்த பிறகு சி.ஏ. (சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட்) படிக்க விரும்பினேன். ஒரு மலையாளப் படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்திருந்தேன். அந்தப் படத்தின் ஸ்டில்கள் பத்திரிகையில் பிரசுரமானது. அதில் வந்த எனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு பாலா சார் ஆபிசில் இருந்து அழைப்பு வந்தது. பாலா சார் படம் என்பதால் உடனே ஓகே சொன்னேன். எங்கள் வீட்டிலும் சினிமாவுக்கு மறுப்பு சொல்லவில்லை. நான் நன்றாக படிக்கிற பெண் என்பதால் பெயில் ஆகாமல் பாஸ் ஆகும் அளவுக்கு மார்க் எடுத்தால் போதும் என்று பச்சைக்கொடி காட்டி விட்டார்கள். இதனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கிய எனது சினிமா பயணம் தடையில்லாமல் தொடருகிறது.

முதன் முதலாக கேமரா முன் நின்றது ஞாபகம் இருக்கிறதா?

2012-ம் ஆண்டு மலையாளத்தில் 'மாஸ்டர்ஸ்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதுதான் எனது முதல் படம். அந்த அனுபவத்தை மறக்க முடியாது.

தற்போது நடித்துள்ள 'எல்.ஜி.எம்' பட அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறேன். நமீதா மேடமும் படத்தில் இருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். டிராவல் சம்பந்தப்பட்ட கதை. ரசிகர்களை மகிழ்விக்கும் அளவுக்கு ஜாலியான, பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை என்று பேர் வாங்கியவர் ஜோதிகா. அவருடன் 'நாச்சியார்' படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?



அது மறக்க முடியாத அனுபவம். ஜோதிகா மேடம் நடித்த 'குஷி', 'சந்திரமுகி' படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவரை ஒரு ரசிகையாக வியந்து பார்த்துகொண்டிருந்த எனக்கு அவருடன் சேர்ந்து நடிக்கப்போகிறோம் என்றதும் என்னையும் அறியாமல் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் அந்த பதற்றம் தேவையற்றது என்பதை அவரது எளிமையாக பழகும் சுபாவமே காட்டிக்கொடுத்தது. அந்தப் படத்தில் அறிமுக நடிகையான எனக்கு நடிப்புக்கான நுட்பங்களை சொல்லிக் கொடுத்ததில் ஜோதிகா மேடம் உதவியாக இருந்தார்.

'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?



சிவகார்த்திகேயன் எல்லோருடனும் ஜாலியாக பழகக்கூடியவர். அவர் படப்பிடிப்பில் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. அத்துடன் அவருக்குள் இருக்கும் எனர்ஜி, நேர்மறை சிந்தனைகள் அனைத்துமே மற்றவர்களிடமும் தொற்றிக் கொள்ளும். படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரையும் அவர் ஜாலியாக இருக்க செய்துவிடுவார்.

'லவ் டுடே' படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்த்தீர்களா?



நான் நடிக்கும்போதே, இந்த படம் நிச்சயம் சிறந்த படமாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அது உண்மையில் எதிர்பார்க்காத வெற்றி. என்னுடைய குடும்பம், நண்பர்கள் என பல தரப்பிலிருந்து பாராட்டினார்கள். எல்லாவற்றையும் விட இயக்குனர் பாலா சார் போன் பண்ணி 'ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க'ன்னு பாராட்டினார்.

உங்களுடைய கதைத் தேர்வு பற்றி சொல்லுங்களேன்?

ஒரு சில படங்கள் நடித்தாலும், அவை சிறந்த படங்களாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். என்னைப் பொறுத்தவரை, ஒரு கதையை நாம் கேட்கும்போது அந்தக் கதை நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்ற ஆசையும், வேட்கையும் தூண்டப்பட வேண்டும். அப்படித்தான் படங்களைத் தேர்வு செய்கிறேன். அந்த விஷயத்தில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

கவர்ச்சியாக நடிப்பீர்களா?



வாய்ப்பே கிடையாது. கவர்ச்சியாக நடிக்க எனக்கு விருப்பமும் இல்லை.

எந்த மாதிரி வேடங்களில் நடிக்க விருப்பம்?

காதல் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதுபோன்ற கதாபாத்திரங்களை மிகவும் விரும்புகிறேன்.

உங்கள் கனவு வேடம் எது?

கனவு வேடம் என்று எதுவுமில்லை. நான் அப்படி நினைத்தாலும் கதை வலுவாக இருந்தால் மட்டுமே அந்த கனவு வேடம் பேசப்படும். சினிமாவில் நாயகிகளுக்கான லைப் என்பது குறுகிய காலம் மட்டுமே. அதற்குள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம், மனதுக்கு நெருக்கமான படங்களில் நடிக்க வேண்டும். அதுதான் எனது இப்போதைய விருப்பம்.

இவானா நடிக்க வராமல் இருந்திருந்தால் இப்போது என்னவாக ஆகியிருப்பார்?

கண்டிப்பாக சார்ட்டட் அக்கவுண்ட்டண்ட் ஆகி இருப்பேன்.

படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் உங்கள் பொழுதுபோக்கு என்ன?

சினிமா, வெப் சிரீஸ் பார்ப்பேன். நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவேன். குடும்பத்தாருடன் ஓட்டலுக்கு சென்று நன்றாக சாப்பிடுவேன். மனதுக்கு பிடித்தபடி நேரத்தை செலவிடுவேன்.

உங்களுக்கு சமையல் தெரியுமா?

ஓரளவுக்கு தெரியும். கொரோனா காலகட்டத்தில் எனது அம்மாவிடம் இருந்து ஓரளவு சமையலை கற்றுக்கொண்டேன். நம்பி சாப்பிடலாம்.

தமிழ் நன்றாக பேசுகிறீர்களே, யாரிடம் தமிழ் கற்றுக்கொண்டீர்கள்?



'நாச்சியார்' படப்பிடிப்பின்போது, பாலா சார் எனக்காக ஒரு தமிழ் பயிற்சியாளரை நியமித்து தமிழ் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். இதுதவிர, தமிழ் படங்கள் பார்த்தும் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டேன்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

நாங்கள் கிறிஸ்தவ குடும்பம். ஞாயிற்றுக்கிழமைதோறும் தேவாலயம் செல்வோம். அதேபோல, தினமும் வீட்டில் பிரார்த்தனையிலும் ஈடுபடுவோம்.

தமிழ்நாட்டில் பிடித்த இடங்கள் எவை?

அனைத்து வழிபாட்டு தலங்களும் எனக்கு பிடிக்கும்.

சினிமா பயணத்தில் மறக்கமுடியாத அனுபவம்?


லவ் டுடே படம் வந்தபோது, என்னை எங்கு பார்த்தாலும் 'நிகிதா' என்று தான் அழைத்தார்கள். இவானா என்று யாருமே கூப்பிடவில்லை. இது என் நெஞ்சை தொட்ட சம்பவமாக அமைந்தது, இப்போது வரை அப்படித்தான் இருக்கிறது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதில் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள்?

வாழ்க்கையில் ஒரு நபரை பற்றி முழுவதும் தெரிந்த பிறகு தான், அவர் மீது நம்பிக்கையே வைப்பேன். எல்லா விஷயத்திலும் நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். எல்லாவற்றையும் பார்த்து பார்த்து கவனமாக மேற்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி சிரித்தார், இவானா.

மேலும் செய்திகள்