''என் இதயத்தில் இடம் பிடிப்பது எப்படி?'' - மனம் திறக்கிறார் வேதிகா
|வெண்ணெய் கட்டி தேகம் கொண்ட நடிகை வேதிகா, தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டி.
'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'பரதேசி', 'காவியத் தலைவன்', 'காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா. வெண்ணெய் கட்டி தேகம் கொண்ட வேதிகா, கொஞ்சல் தமிழ் பேசி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். குறிப்பாக 'காஞ்சனா-3' படத்தில் பேயிடம் அடிவாங்கி இவர் சொல்லும் 'ஓம் சக்தி... பராசக்தி...' வசனத்தை, ஏராளமான குழந்தைகள் சொல்லி நடித்து 'ரீல்ஸ்' வெளியிட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 'காளை' படத்தில் 'குட்டி பிசாசே... குட்டி பிசாசே...' என்ற பாடலுக்கு சிம்புவுடன் இவர் போட்ட துள்ளல் நடனம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக அவரை மாற்றியது.
கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வந்த வேதிகா, மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். அதுவும் ஒன்றல்ல, அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்கிறார். பிசியாக நடித்து கொண்டிருக்கும் வேதிகாவை, படப்பிடிப்புக்கிடையே சந்தித்து 'ஹாய்' சொன்னோம். பரபரப்பாக இருந்தாலும் புன்னகை மலர நம்மை வரவேற்றார். 'தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்கு மனம் திறந்தார். சினிமா தாண்டி பல விஷயங்களை பகிர்ந்தார். அவரது எதார்த்தமான பேச்சும், அதில் இருந்த ஆழமான கருத்துகளும் நம்மை அசத்தியது. அந்த அசத்தல் பேட்டியை பார்க்கலாமா....
பயோ டேட்டா
பெயர் - வேதிகா
செல்லப்பெயர் - தீது
பிறந்த தேதி - பிப்ரவரி 21
பிறந்த இடம் - மும்பை
பிடித்த உணவு - வீட்டு உணவுகள் அனைத்தும்
பிடித்த நிறம் - வெள்ளை
லக்கி நம்பர் - எல்லாமே
பிடித்த உடை - பைஜாமா, சேலை
உயரம் - 5 அடி 4 அங்குலம்
எடை - 50 கிலோ
பிடித்த இடம் - வீடு
பிடித்த நபர் - அம்மா, செல்ல நாய்க்குட்டி 'ஆஸ்–கார்'
ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது - வாழு வாழ விடு
எப்படி இருக்கீங்க...
ரொம்ப நல்லா இருக்கேன்.
இப்போது என்னென்ன படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
தமிழில் பிரபுதேவா மாஸ்டர் கூட 'பேட்டா ராப்' படம் நடிக்கிறேன். அதில கலக்கல் டான்ஸ் இருக்கு. அப்புறம் 'மஹால்' என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழ் - தெலுங்கில் ரெடியாகும் 'ஜங்கிள்' படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் 'ரசாகர்' படத்துல நடிச்சு முடிச்சுருக்கேன். ஒரு வெப் சீரிஸ்-ல முக்கியமான கதாபாத்திரத்துல நடிக்கிறேன். கன்னடத்தில் 'கனா' படத்தில் நடிக்கிறேன். 2 மலையாள படத்திலேயும் நடிச்சுட்டு வரேன்.
அப்போ ரொம்ப பிசியான ஆளு தான் நீங்க...
நல்ல விஷயம் தானே...
நீங்கள் நடித்ததில் பிடித்த படம் எது?
எல்லா படங்களுமே எனக்கு முக்கியமான படம் தான். அப்படி தான் நான் நடிச்சுருக்கேன், நடிச்சுட்டும் இருக்கேன்.
வில்லி போன்ற எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உண்டா?
ஏன் இருக்கக்கூடாதா? நிச்சயமா இருக்கு. இன்னும் சொல்லப்போனா அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம். நெகட்டிவ் எமோஷைன மனசுல வச்சுகிட்டு நடிக்கணும். நிஜ வாழ்க்கையில எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைச்சுட்டு இருக்கிறப்போ, அதை வெளிப்படுத்துறது ஈசி. ஆனா கெட்ட விஷயத்தை காட்டுற கேரக்டர்ல நடிக்கணும்னா அது கஷ்டம். அதை உணர்ந்திருக்கேன்.
அப்படி என்றால் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் தானே...
அப்புறமா சொல்றேன் (சிரிக்கிறார்)
தனிப்பட்ட வாழ்க்கையில் பிடித்த விஷயம் எது?
இயற்கையும், அத ரசிச்சுகிட்டே டிராவலிங் போறதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சமீபத்தில் எந்த விஷயத்துக்காக கொந்தளித்தீர்கள்?
பல கம்பெனிகளில் மாடுகளை லாப நோக்கத்துக்காக வளர்க் குறாங்க. மாட்டிறைச்சிக்காக நாம அலையுறது தான், அதுங்க கஷ்டத்துக்கு காரணம். நம்ம காசுக்காக, நிறைய கம்பெனிக்காரங்க மாடுகளை கொடுமைப்படுத்திட்டு வராங்க. கொடூரமாக கொன்னுக்கிட்டு இருக்காங்க. அதுமாதிரி நிறைய வீடியோ பாத்துட்டு கொந்தளிச்சு போயிருக்கேன்.
நீங்க சைவமா, அசைவமா?
சைவம் தான். ஒரு காலத்துல முட்டை மட்டும் சாப்பிட்டேன். இப்போ அதையும் விட்டாச்சு. ஏன் பால் சம்பந்தமான பொருட்களை சாப்பிடுறதைக்கூட விட்டுட்டேன். மாட்டை தாய்க்கு சமமா கும்பிடுறோம். பாலுக்காக, கம்பெனிக்காரங்க செயற்கையா மாடுகளுக்கு ஊசி போட்டு கருத்தரிப்பு செய்யுறாங்க. இதுவும் ஒரு ரேப் மாதிரி தானே... ஒரு பெண்ணுக்கு அவளோட சம்மதம் இல்லாமலே இப்படி செய்யுறது ரேப் தானே... மாடு என்ன அடிமையா? இதெல்லாம் பாத்துட்டு வேதனைப்பட்டு தான் பால் குடிக்கிறதையும் விட்டுட்டேன். காய்கறி, பழங்கள் தான் என் சாப்பாடே...
அது தான் உங்களது அழகுக்கும் காரணமா?
அப்படியும் சொல்லலாம். நம்மை பாத்து நிறைய பேர் பாலோ பண்ணா நல்லது தானே... அசைவம் சாப்பிட்டாலே நமக்குள்ள ஒரு நெகட்டிவிட்டி வந்தது மாதிரி தோணும்.
வெளிநாடுகளில் உங்களை மிகவும் கவர்ந்த நாடு என்ன?
மாலத்தீவு, இத்தாலி அப்புறம் ஐரோப்பா.
சினிமாவில் உங்களது கதை தேர்வு எப்படி?
எனக்கு நல்ல நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் கேரக்டரா இருக்கணும். நல்ல டீம் இருக்கணும். அப்படி அமைஞ்சா டபுள் ஓகேனு சொல்லிட வேண்டியது தான்.
இந்த ஹீரோ என்றால் எனக்கு சம்பளமே வேண்டாம்பா... என்று நீங்கள் நடிக்க விரும்பும் நடிகர் யார்?
சம்பளம் கண்டிப்பா வாங்கணும்ல... அதுக்காகத் தானே நடிக்கிறோம். ரஜினிகாந்த், விஜய், விஜய் சேதுபதி மாதிரி பெரிய ஸ்டார்ஸ் கூட நடிக்கணும்னு ஆசை இருக்கு. அதுக்காக பிரீயா நடிக்க முடியாது (சிரிக்கிறார்).
தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?
என்னோட சினிமா பயணம் ஸ்டார்ட் ஆனதே தமிழில் தான். தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். கன்னடத்துக்கு பிறகு, என்னோட 2-வது தாய்மொழி தமிழ் தான்.
தமிழ் அழகாக பேசுறீங்களே...
சூட்டிங்ல கத்துக்கிட்டது தான்... யார் யார்? என்ன பேசுறாங்கன்னு தெரிஞ்சுக்கணும்ல... (கண்ணடிக்கிறார்)
அப்போ 'டப்பிங்'கும் பேசவேண்டியது தானே...
நிச்சயம் முயற்சி செய்வேன்.
'முனி', 'காஞ்சனா-3' படத்துக்கு அப்புறம் பேய் படத்தில் நடிப்பது எப்போது?
தமிழில் நடித்து வரும் 'ஜங்கிள்' படம் அப்படி இருக்கும்!
ஓ.டி.டி. வரமா, சாபமா?
நல்ல விஷயம் தாங்க...
ரோல் மாடல் யார்?
என் அம்மா ஆஷா தான். ரொம்ப பாசிட்டிவ் மைண்ட் லேடி. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் பாசிட்டிவ்வா சமாளிப்பாங்க. என் அம்மா இதுவரை சினிமால நடிச்சது இல்ல. நான் தான் கட்டாயப்படுத்திட்டு இருக்கேன். பாக்கலாம்.
சினிமா கற்றுத்தந்தது என்ன?
பொறுமை தான்.
உங்கள் இதயத்தில் இடம் பிடிக்க என்ன செய்யவேண்டும்?
யாராவது ஒருத்தரோட வாழ்க்கைக்கு உதவுங்க... பிராணிகளுக்கு உதவுங்க... மற்றவங்களுக்கு இரக்கத்தை காட்டுங்க... அதுதான் எனக்குப் பிடிக்கும்.
கிசுகிசு, வதந்தி பற்றி...
நோ நோ அதுக்கெல்லாம் டைம் இல்ல.
சமூகத்தில் நடக்க வேண்டிய மாற்றம் என்றால் என்ன?
பிராணிகள் கொல்லப்படக் கூடாது.
வேதிகா மனதை துளைத்த முதல் காதல்?
காதைக் கொடுங்க... அம்மா தான் (ரகசியமாக கிசுகிசுக்கிறார்)
அப்போ 2-வது காதல்?
டான்ஸ் தான். 3-வது, 4-வது அப்படினு கேட்காதீங்க... நானும் சொல்லிக்கிட்டே இருப்பேன். உண்மை கசக்கும் பாஸ்.
இப்படி சொல்லி நமக்கு பிரியா விடை கொடுத்தார், வேதிகா.