இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளை கடந்த நடிகை மலைக்கா அரோரா...
|இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளாக கலக்கி வரும் நடிகை மலைக்கா அரோரா தனது வழியில் வரும் அனைத்து தடைகளையும் கடந்து வந்துள்ளார். அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி,
புனே,
3 தசாப்த கால நீண்ட பயணம். இது எப்படி சாத்தியம்?
மலைக்கா அரோரா: இதற்கு பல காரணங்களை கூறலாம். கடின உழைப்பு, புதுப்புது கண்டுபிடிப்புகள், விடாமுயற்சி, காலந்தவறாமை இவற்றுடன் குறிப்பிட்ட அளவிலான ரகசிய திட்டங்கள் மற்றும் புரிந்து கொள்ள இயலாத மர்மங்களும் கூட உண்டு என கூறுகிறார்.
நிச்சயம், எனக்கு ஆதரவாளர்களாக நிறைய பேர் உள்ளனர். புகைப்படக்காரர்கள், ஊடக மக்கள் அல்லது என்னுடைய குடும்பத்தினர் ஆகட்டும். பெரிய அளவில் அவர்கள் எனக்கு ஆதரவு தருகின்றனர்.
என்னுடன் தோள் கொடுக்கும் நபர்கள் எப்போதும் உண்டு. அதுவும், நம்முடைய நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் பயணிப்பது என்பது மிக கடினம் வாய்ந்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் வாழுகின்றனர். திருமணம், குழந்தைகள்... இவை அனைத்தும் ஒரு செயலை தடை செய்யும் வகையில் உள்ளன.
ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டால், அவருக்கு குழந்தைகள் வந்து விட்டால், அவர் எல்லாவற்றையும் நிறைவு செய்து விட்டார் என நாம் எண்ணுகிறோம்.
நான், இதிலிருந்து வேறுபடுகிறேன். அந்த எண்ணங்களை என்னால் மாற்ற முடிந்துள்ளது என நான் நினைக்கிறேன். அதனால், 3 தசாப்தங்கள் கடந்தும் நான் இன்னும் திரையுலகில் நீடிக்கிறேன் என கூறியுள்ளார்.
பொதுவாக 40 வயதில் திரை பயணம் நிறைவடையும் சூழலில், பெண்களுக்கான தனி சின்னம் ஆக உருவெடுத்து உள்ளீர்கள். அதற்கான ரகசியம்...
மலைக்கா அரோரா: முன்னரே கூறியது போல் நானும் அந்த சூழலில், போதும், எனக்கு திருமணம் நடந்து விட்டது. எனது பயணம் நிறைவடைந்தது என உணர்ந்து, அதன்படி இருந்து விட்டால், 40 வயதில் அனைத்தும் முடிந்து இருக்கும். ஆனால் அப்படி நான் நினைக்கவில்லை.
தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பவர்களில் ஒருவராக நானும் இருக்க விரும்பினேன். அந்த மனநிலை, பின்னணியில் இருந்து வந்தவள் நான். அதனையே எனது தாயார் எப்போதும் என்னிடம் கூறுவார். பெண்கள் சுதந்திரமுடன் செயல்படுவது மிக அவசியம் என்று.
அதுவே எனது எண்ணமும் கூட. வளர, வளர வாழ்க்கை மிக கடினம் ஆகவேயிருந்தது. நிதி சார்ந்த சூழலிலும்... அதனால், இறுதி மூச்சு வரை எனக்காக நான் பணியாற்ற வேண்டியிருந்தது. நான் வாயில் வெள்ளி கரண்டியுடன் பிறந்தவள் இல்லை. அதுபோன்ற குடும்ப பின்னணியும் எனக்கு இல்லை. உழைக்கும் வர்க்க சூழலில் இருந்து வந்தவர்கள் நாங்கள்.
அதனால், எனது சொந்த காலில் நின்று, உழைத்து பொருளீட்டும் தேவை எனக்கிருந்தது. திருமணம் ஆன பின்னர் கூட, எல்லாவற்றையும் விட்டு விட்டு, எனது தேவைகளுக்கு கணவரை சார்ந்திருக்கவில்லை.
சொல்ல போனால், எனது பணியை தொடர, குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஊக்கம் தரும் வகையிலேயே எனக்கு அமைந்திருந்தது. வேலை செய்யாதபோது, வெறுமையாகவே உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
நீங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவராக வளர்ந்தவர். பலருக்கு அது தெரியாது இல்லையா?
மலைக்கா அரோரா: எனது தந்தை பஞ்சாபி. தாயார் மலையாளி மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர். எனது தாயார் வழி எங்களது வாழ்வில் வலுவாக ஊன்றிவிட்டது. நானும், சகோதரியும் கிறிஸ்தவம் தழுவியவர்கள். அதனால், அந்த மதத்தினை பின்பற்றும் கத்தோலிக்கர்கள் நாங்கள்.
நல்லகாலம், நாங்கள் மதசார்பற்ற குடும்பத்தில் வாழ்கிறோம். நான் முஸ்லிம் நபரை திருமணம் செய்து கொண்டேன். எனது தந்தை பஞ்சாபி. என்னுடைய தாயார் மலையாள கிறிஸ்தவர். எனது சகோதரியும் முஸ்லிம் நபரை திருமணம் செய்து கொண்டார். எங்களுடைய குடும்பத்தில் அனைத்து வகையான மத நம்பிக்கைகளும் உள்ளன.
எனது மகனுக்கு சுதந்திரம் அளித்து இருக்கிறோம். அவன் என்னிடம், நான் முதலில் இந்தியன் என கூறினான். அதனால், இந்த விசயத்தில் எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விட்டோம். அவனும் கிறிஸ்தவ மதத்தினையே தழுவியுள்ளான். தேவாலயம் செல்கிறான். மசூதிக்கு போகிறான். கோவிலுக்கும் செல்கிறான். நாங்கள் ஒரு மதசார்பற்ற குடும்பம் என கூறியுள்ளார்.
உங்களை பராமரிப்பதில் வியக்கத்தக்க வழிகளை மேற்கொள்வது எப்படி? உங்கள் தோற்றத்திற்கான பின்னணியில் எவ்வளவு கடின உழைப்பு உள்ளது?
எனது நலனை பராமரிப்பதில் நான் அதிகம் பெருமை கொள்கிறேன். ஒவ்வொருவரும் அப்படி இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்! நீங்கள் மற்ற எல்லாவற்றையும், எதனையும் விட முதலில் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அது உடலியல், உணர்வு சார்ந்த மற்றும் மனநலன் பராமரிப்பையும் உள்ளடக்கியது.
மூன்றுமே வளர்த்தெடுக்கப்பட வேண்டியது அவசியம். மனநலனை மறந்து விட்டு, உங்களது தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த முடியாது.
அதனால், நான் சரியாக சாப்பிடுகிறேன். எனது நலனில் கவனம் கொள்கிறேன். வேலை செய்கிறேன். தியானம் செய்கிறேன். யோகா பயிற்சி மேற்கொள்கிறேன். நிறைய விசயங்களை படிக்கிறேன். எனது வாழ்வை மேம்படுத்தும் மக்கள் என்னை சூழ்ந்து காணப்படுகின்றனர். அது சமஅளவில் முக்கியம் என கூறுகிறார்.
நீங்கள் சந்தித்த கடுமையான சவால்களை பற்றி... அதனை எப்படி மேற்கொண்டு வெளியே வந்தீர்கள்?
மலைக்கா அரோரா: நான் உணர்ச்சி மிகுந்தவள். அதனால் உடைந்து போய், அழுது விடுவேன். அது எனது மனக்கவலையை போக்கவும் செய்கிறது. கோபத்தினால் ஏற்படும் உணர்வு முழுவதும் வெளியேற அது ஒரு சிறந்த வழி. நான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை கடந்து வந்திருக்கிறேன்.
முன்னேறி செல்ல விரும்புபவள் நான். என்னை முன்னோக்கி செலுத்தி, வலிமையுடனும், சிறந்த முறையிலும் திரும்புகிறேன். என்னை கீழே இழுக்கும் எதனையும் நான் அனுமதிப்பது இல்லை. என்னுடைய விளையாட்டில் நான் மேலே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பது எனக்கு தெரியும்.
அனைத்து சவால்களையும் ஏற்று கொள்கிறேன். அதில் இருந்து பொலிவு பெற்று நான் வெளிவர வேண்டும் என்பது எனக்கு தெரியும் என அவர் கூறுகிறார்.
நீங்கள் விரும்பத்தகாத விமர்சனங்களுக்கு எப்படி பதில் வினையாற்றுகிறீர்கள்?
மலைக்கா அரோரா: உண்மையில் நான் அதற்கு எதிர்வினையாற்றுவதே கிடையாது. ஒரு காலத்தில் அது என்னை பாதித்தது. நானும் மனிதரே. ஆனால், முன்பே கூறியது போன்று, அந்த விசயங்கள் என்னை சூழ்ந்து விடாமல் பார்த்து கொள்வேன். எனது வாழ்வில் இருந்து அதனை எவ்வளவு தொலைவில் வைக்கிறேனோ, அந்த அளவுக்கு அது என்னை சிறந்த நபராக்குகிறது. நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
அர்பாஸ் கான் தொடர்ந்து நண்பராக உள்ளாரா?
மலைக்கா அரோரா: நாங்கள் மகிழ்ச்சியான, அமைதியான நபர்கள். அவர் ஆச்சரியம் நிறைந்த நபர். அவருக்கு வாழ்க்கையில் சிறந்தது கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். சில சமயங்களில் மனிதர்கள் ஆச்சரியம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சிறந்தவர்களாகவும் அவர்கள் ஏனோ இருப்பதில்லை. அவருக்கு நல்லது ஏற்படவே எப்போதும் நான் விரும்புவேன்.
சொந்த மகிழ்ச்சியை ஈடாக கொடுத்து, கடினம் நிறைந்த சூழலில், சிக்கலான முடிவுகளை எடுக்கும் பெண்களுக்கான உங்களது செய்தி... என்னவாக இருக்கும்?
மலைக்கா அரோரா: எனது மனதின் வழியே பின்பற்றி சென்று அதற்கு சான்றாக வாழ்கிறேன். எனது முடிவில் உறுதியுடன் இருக்கிறேன். அது எவ்வளவு கடினம் என்பதும் நான் அறிவேன். எவ்வளவு எதிர்ப்பு, எதிரான விசயங்கள் என்னை சூழ்ந்தபோதும், அதில் நான் உறுதியுடன் இருக்கிறேன். சில சமயங்களில் உங்களை பற்றி மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டியிருக்கும். பெண்களாகிய நமக்கு முதலில் நம்முடைய குழந்தை, நம்முடைய குடும்பம், நமது கணவரை பற்றி நினைக்க வேண்டும் என கற்று கொடுக்கப்படுகிறது.
அதில், உங்களை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். ஆனால், முதலில் எனக்கே நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதனால் இன்று சிறந்த நபராக இருக்கிறேன். மகனுடன் சிறந்த தொடர்பு உள்ளது. நான் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என அவன் என்னை காண்கிறான். எனது முன்னாள் கணவருடன் நல்ல முறையிலான உறவு உள்ளது. எனக்காக நான் நிற்கிறேன்.
முடிவுகளை எடுக்கிறேன். அதனால் பெண்கள் அச்சப்பட கூடாது. உங்களது மனம் கூறுவனவற்றை பின்பற்ற பயப்பட கூடாது. வாழ்க்கை எளிதல்ல. ஒவ்வொருவரையும் நீங்கள் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என கூறுகிறார்.
அன்புக்கு வயதில்லை என்ற உண்மையை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள். அர்ஜூன் கபூர் உடனான உங்களது பிணைப்பு பற்றிய சிறந்த விசயம் எது?
மலைக்கா அரோரா: அவர் சிறந்த நண்பரும் கூட. உங்களது சிறந்த நண்பர் மீது அன்பு செலுத்துவதும், அன்பில் விழுவதும் முக்கியம் என அரோரா கூறுகிறார். அர்ஜூன் என்னை புரிந்து கொள்கிறார். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக மகிழ்ச்சிப்படுத்தி கொள்கிறோம் என நான் நினைக்கிறேன்.
இந்த பூமியில், எது பற்றியும், எல்லாவற்றை பற்றியும் அவருடன் என்னால் பேச முடியும். ஓர் உறவில் அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் நீங்களாக இருக்க உங்களால் முடிய வேண்டும். அர்ஜூனுடன் இருக்கும்போது, நான் நானாக இருக்க முடியும் என அரோரா கூறுகிறார்.
அவர் உங்களுக்கு கூறிய சிறந்த விசயங்கள் பற்றி?
மலைக்கா அரோரா: நிறைய விசயங்களை கூறியுள்ளார்! முன்பே கூறியதுபோன்று, என்னை பெரிய அளவில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நபர் அவர். எப்போதும் எனக்கு ஆதரவளிப்பவர். ஊக்கமளிப்பவர். என்னை தாங்கிபிடிப்பவர். சிறந்த ஆண் நண்பர்.
உங்களது ரசிகர்கள் வட்டம் மட்டுமே விரிவடைவது பற்றிய அவரது எண்ணம்?
மலைக்கா அரோரா: நீங்கள் ஒருவரிடம் அன்புடன் இருக்கும்போது, அவர்களுக்கு நீங்கள் சொந்தமுடையவர்களாகி விடுகிறீர்கள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடனும், வளர்ச்சிக்குரிய வகையிலும் நடந்து கொள்கிறோம்.
திருமண அமைப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா? திருமண மணியோசை விரைவில் கேட்கப்பட உள்ளதா?
மலைக்கா அரோரா: திருமண அமைப்பு அழகானது என நான் நினைக்கிறேன். அதேவேளையில், சமூக தேவை அல்லது அழுத்தத்திற்காக திருமண பந்தத்தில் அவசரப்பட கூடாது என்று நான் நினைக்கிறேன். சரியான காரணங்களுக்காக அதனை செய்ய வேண்டும். பெற்றோர் உங்களை கட்டாயப்படுத்தும் மற்றும் சிலர் உங்களிடம், இயற்கையின் மணியோசை உங்களை அழைக்கிறது என கூறும் காலங்கள் உண்டு.
நீங்கள் சரியான நபருடன் இருக்கும்போது, அது ஓர் அழகான அமைப்பு. எனது திருமணம் என வரும்போது, அதற்கு பதிலளிக்க நான் இன்னும் தயாராகவில்லை என்றே நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.