< Back
சிறப்பு பேட்டி
குற்றப் பரம்பரை படத்தை எடுப்பது உறுதி ,இயக்குனர்கள் பாலா, அமீர் என்னை செதுக்கினார்கள் - மனம் திறக்கிறார் நடிகர் சசிகுமார்
சிறப்பு பேட்டி

'குற்றப் பரம்பரை' படத்தை எடுப்பது உறுதி ,''இயக்குனர்கள் பாலா, அமீர் என்னை செதுக்கினார்கள்'' - மனம் திறக்கிறார் நடிகர் சசிகுமார்

தினத்தந்தி
|
24 Aug 2023 8:11 AM IST

பாலா, அமீர் போன்ற பெரிய இயக்குனர்களின் பயிற்சிப் பட்டறையில் கூர்தீட்டப்பட்ட கத்தியாய், ‘சுப்ரமணியபுரம்' படத்தின் மூலமாக இயக்குனராகவும், நடிகராகவும் சினிமாவுக்கு வந்தவர், சசிகுமார்.

தமிழ் சினிமாவின் 'பீரியட்' படங்களுக்கு ஒரு 'பெஞ்ச்மார்க்' ஆக அமைந்த 'சுப்ரமணியபுரம்' படம், சசிகுமாரை நோக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மதுரை மண்ணின் மைந்தனான சசிகுமார், அடுத்தடுத்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'நாடோடிகள்', 'சுந்தரபாண்டியன்', 'குட்டிப்புலி', 'வெற்றிவேல்', 'கிடாரி' போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. சமீபத்தில் வெளிவந்த 'அயோத்தி' படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. தமிழ் சினிமாவின் தனித்துவமான கதாநாயகர்களில் ஒருவரான சசிகுமார், 'தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்கு மனம் திறந்தார்.

அதன் விவரம் வருமாறு:-

'சுப்ரமணியபுரம்' படம் உருவாக எது காரணம்?

ஒரு படத்தை டைரக்டு செய்ய ஆசைப்பட்டப்போ, இந்தக் கதை டக்குனு மண்டைக்குள்ள வந்துடுச்சு. அப்படித்தான் 80 காலகட்டத்துல வாழ்ந்த ரவுடிங்களோட இருட்டு வாழ்க்கைய படத்துல காட்டினேன். இது என்னோட பர்ஸ்ட் படம். முதல் படத்திலயே எப்படி ஒரு பீரியட் சப்ஜெக்ட் பண்ணுவீங்க? இதெல்லாம் பெரிய டைரக்டர், புரொடியூசர் தான் பண்ணமுடியும்னு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க... முடியும்னு நம்பிக்கை இருந்துச்சு... அதான் நானே தயாரிச்சேன்.

மறக்க முடியாத அனுபவம்?

'சுப்ரமணியபுரம்' படத்த எடுக்குறப்போ, மதுரையில் இருக்கும் தங்க ரீகல் தியேட்டர இடிச்சு புதுசா கட்ட இருந்தாங்க... ஆனா தியேட்டர் ஓனர்கிட்டே பேசி அவகாசம் கேட்டு, அங்கு சூட்டிங் நடத்தி முடிச்சோம். சூட்டிங் முடிச்சதுக்கு அப்புறம் தான் அந்த தியேட்டர இடிச்சு புதுசா மாத்துனாங்க... இது மறக்க முடியாத விஷயம்னு சொல்லலாம்.

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுப்பீர்களா?

நிச்சயமா... 'குற்றப் பரம்பரை' படம் எடுக்கப் போறேன். அந்த கதைய தான் எழுதிட்டு இருக்கேன். எல்லாமே ரெடியா இருக்கு... அதுக்கான வேலை தான் போய்க்கிட்டு இருக்கு. நல்ல நேரத்துல அறிவிப்பு வரும். அனேகமா 2, 3 மாசத்துல ஆரம்பிச்சுடுவேன்.

உங்கள் படங்களில் நட்பு - துரோகம் அதிகமாக காட்டப்படுகிறதே... தனிப்பட்ட வாழ்க்கையில் நட்பால் துரோகத்தை சந்தித்துள்ளீர்களா?

எல்லாமே இருக்கத்தானே செய்யும். சில பிரெண்ட்ஸ் கூட இருப்பாங்க... சில பேரு பாதியிலேயே போயிடுவாங்க... அதுக்கெல்லாம் கவலைப்படாம இருக்கணும்.

சமுத்திரக்கனியுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா...

என்னோட பிரண்டு தான அவரு... என்ன இப்போ தெலுங்கு சினிமால பிசியா நடிச்சுகிட்டு இருக்காப்ல... வாய்ப்பு வரும்போது ஜாயின் ஆவோம்...

உங்களுடைய அந்த 'பிரேக் விட்டு விட்டு பிடிப்பது' போன்ற சிரிப்புக்கு ரசிகர்கள் நிறைய பேர் இருக்காங்களே...

அது என்னோட சிரிப்பே கிடையாதுங்க... 'நாடோடிகள்' படத்துல அரசியல்வாதியா நமோ நாராயணன் நடிச்சாரு... தலையாட்டிகிட்டே அவரு சிரிக்கிறது நல்லா இருக்கும். அந்த சிரிப்ப அப்படியே காப்பி அடிச்சு சிரிக்கனும்னு நினச்சேன். 'பிராக்டிஸ்' செஞ்சும் முடியல. கடைசில நான் வாய் மட்டும் அசைக்க, 'டப்பிங்'ல அவர் தான் சிரிச்சாரு...

டி.ராஜேந்தர் மாதிரி தாடியிலேயே சுத்திக்கிட்டு இருக்கீங்க... தாடி இல்லாம நடிப்பீர்களா?

தாடி எனக்கு செட் ஆயிடுச்சு... தாடி இல்லாம என்ன பாத்தீங்கன்னா 'யோவ் யாருய்யா இது?'னு கேப்பீங்க... தாடி என்னோட டிரேட்மார்க்காவே ஆயிடுச்சு... ஆனா கதைக்கு தேவைப்பட்டா தாடி எடுப்பேன். நோ பிராப்ளம்.

புதிதாக என்னென்ன படங்கள் நடிக்க இருக்கீங்க?

'பகைவனுக்கு அருள்வாய்', 'நா நா', 'நந்தன்' அப்படின்னு புதுசா 3 படம் நடிச்சுருக்கேன். சூட்டிங் எல்லாமே முடிஞ்சுடுச்சு. இப்போ படம் டைரக்ட் பண்ற வேலை தான் பாக்கி. அதான் புதுசா படம் நடிக்க ஒத்துக்கல.

15 வருடத்துக்கு பிறகு 'சுப்ரமணியபுரம்' படத்தை 'ரீ-ரிலீஸ்' பண்ணியிருக்கீங்களே...

ஆச்சரியமா இருக்கு... இத்தன வருஷம் கழிச்சும் இந்தப் படத்த பேன்ஸ் கொண்டாடுறாங்க... தியேட்டர்ல பாட்டுக்கும், மாஸ் சீன்ஸ்க்கும் எந்திரிச்சு ஆடுறாங்க.. இதையெல்லாம் தியேட்டர்ல போய் பாத்தப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... இந்தப் படம் வந்தப்போ ஸ்கூல் படிச்ச குரூப் தான், இப்போ நிறைய வந்துருக்கு... பழைய படம் மாதிரி இன்னும் தெரியல.

இப்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?

தமிழ் சினிமா நல்லா இருக்கே.. லாக் டவுன் அப்புறம் நிறைய படங்கள் வருது. சின்ன 'பட்ஜெட்' படம் நிறைய 'ஹிட்' ஆகுது. இதெல்லாம் நல்ல விஷயம். மக்கள்கிட்ட தான் சினிமா இருக்கு.

சினிமாவுக்கு வர காரணம்?

நான் ஸ்கூல் படிக்கிறப்போவே சினிமா ஆசை இருந்துச்சு... ஹீரோ-ஹீரோயின நடிக்க வைக்கிறது யாரு? அது டைரக்டரு... அப்போ நாமளும் டைரக்டரா ஆவணும்னு மனசுல பதிஞ்சுடுச்சு... இந்த முடிவு நான்ஏழாப்பு (7-ம் வகுப்பு) படிக்கிறப்போ எடுத்தது. ஸ்கூலிலேயே என்னைய பாத்து டைரக்டருன்னு தான் பசங்க கூப்பிடுவாங்க..

உங்களுக்கு பிடித்த நடிகை?

காமெடி பண்ற எல்லா ஹீரோயினும் பிடிக்கும். மனோரமா, கோவை சரளாவுக்கு அப்புறமா யாருமே நடிப்பு பிளஸ் காமெடியில கெத்தா வரல. ஹீரோயின்ஸ் காமெடி பண்றது பெரிய விஷயம். அது ஊர்வசி, லைலாவுக்கு செட் ஆச்சு. அதுக்கப்புறம் யாரும் அவ்வளவா காமெடியில ஆர்வம் காட்டல.

சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்...

வாய்ப்பில்ல ராஜா... வாய்ப்பில்ல...

புதிதாக வரும் நடிகர்கள், இயக்குனர்களுக்கு நீங்க சொல்லும் அறிவுரை?

அவங்களுக்கு தெரியாதா... நம்ம என்ன அறிவுரை சொல்லிக்கிட்டு...

'வம்சம்', 'போராளி' படத்துக்குப் பிறகு ஏதாவது படத்தில் பாடுவீர்களா...

நல்லாத்தானே பேசிகிட்டு இருந்தீங்க... ஏன் திடீர்னு இந்த காமெடி? அந்தப் படத்துல ரெண்டு வரி கத்துனேன். அதையெல்லாம் பாட்டுன்னு நினைச்சு... உங்களையெல்லாம்...

வாழ்க்கை கற்றுத்தந்த பாடம்?

உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டும் பலன் கிடைக்கலயேன்னு வருத்தப்படவே கூடாது. முயற்சியை மட்டும் விட்டுடவே கூடாது. பலன் நம்மை தேடி வரும்.

பாலா, அமீரிடம் உதவி இயக்குனராக இருந்த அனுபவம்?

டைரக்டர்கள் பாலா சார் கிட்டேயும், அமீர் சார்கிட்டேயும் நிறைய திட்டு வாங்குறது நான் தான். அந்த திட்டு கூட, செல்லமாத்தான் இருக்கும். ஏதாவது தப்பு நடந்துச்சுனா போதும், 'டேய் சசி... சசி...' அப்படின்னு குரல் கேக்கும். அந்த அதட்டல் குரல்ல உரிமையும் இருக்கும். ஒருதடவை கொடைக்கானல்ல சூட்டிங் போயிட்டு இருந்துச்சு... அப்போ ஒரு நடிகர் என்கிட்ட வந்து, 'அடுத்து நீங்கள் கண்டிப்பா டைரக்டர் ஆவீங்க சார்ன்னு' சொன்னாரு. 'என்ன சார்'ன்னு நான் கேட்டதுக்கு, 'டைரக்டருக்கு யார் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கோ, அந்த பேரு தான் செட்ல அடிக்கடி கேட்டுக்கிட்டே இருக்கும்'னு சொன்னாரு... ஓ இந்த திட்டுதான் நம்மல அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுபோக போகுதான்னு யோசிச்சேன். அதுதான் நடந்துச்சு... அந்த திட்டு தான் என்னைய செதுக்குச்சு...

இப்படி சொல்லி கலகலப்பாக முடித்தார், சசிகுமார்.

பயோடேட்டா

பெயர் - சசிகுமார்

செல்லமாக அழைப்பது - ஒரு பயலும் கூப்பிட்டது இல்ல..

பிறந்த தேதி - செப்டம்பர் 28

பிறந்த இடம் - மதுரை

உயரம் - தெரியாது

எடை - பாக்கல

பிடித்த உணவு - பிரியாணி

பிடித்த நடிகர் - ரஜினிகாந்த், கமல்ஹாசன்

பிடித்த நடிகை - மனோரமா, கோவை சரளா

பிடித்த நிறம் - கருப்பு, நீலம்

பிடித்த விளையாட்டு - கிரிக்கெட்

பிடித்த கிரிக்கெட் வீரர் - சச்சின், தோனி

லக்கி நம்பர் - 5

ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது - நேர்மையா இரு. பட்ட கஷ்டம் வீண் போகாது.

மேலும் செய்திகள்