யூகி: சினிமா விமர்சனம்
|வாடகைதாயை மையமாக கொண்டு உருவாகியுள்ள மற்றொரு படம் யூகி.
பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஆனந்தி காரில் கடத்தப்படுகிறார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பிரதாப் போத்தன் துப்பறியும் நிபுணர் நரேனை தொடர்பு கொண்டு ஆனந்தியை கண்டுபிடித்து தரும்படி கோருகிறார். நரேனுக்கு உதவியாக தற்காலிக பணி நீக்கத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரையும் அனுப்பி வைக்கிறார். இவர்கள் ஆனந்தியை தேட ஆரம்பிக்கின்றனர்.
இன்னொரு புறம் நட்டியும் கூட்டாளிகளுடன் தேடுகிறார். ஆனந்தி யார்? அவரை கண்டுபிடித்தார்களா? கடத்தியது யார்? சினிமா நடிகர் ஜான் விஜய் ஏன் கொல்லப்படுகிறார்? போன்ற முடிச்சுகளுக்கு விடையாக மீதி கதை.
கதிரின் கதாபாத்திர வார்ப்பும். அவரது நடிப்பும் அம்சம். நரேனுடன் இணைந்து அவர் ஆனந்தியை தேடுவதும் பிறகு கதாபாத்திரத்தின் சஸ்பென்சும் எதிர்பாராதது. நாயகியாக வரும் ஆனந்தி இரண்டாம் பாதியில் திரைக்கதையை தாங்கிப் பிடித்து நடிப்பால் நெகிழ வைக்கிறார். துப்பறியும் நிபுணராக வரும் நரேன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சாமி கதாபாத்திரத்தில் வரும் நட்டிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை தேர்ந்த நடிப்பால் தனக்கே உரிய பாணியில் சிறப்பாக செய்துள்ளார்.
இன்னொரு நாயகியாக வரும் பவித்ரா லட்சுமி. ஜான் விஜய், வினோதினி, ஆத்மியா ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. கிரைம் திரில்லர் பாணியில் படத்தை சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் நகர்த்தி உள்ளார் இயக்குனர் ஜாக் ஹாரிஸ். ஆரம்பத்தில் இருந்தே திரைக்கதையில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அடுத்தடுத்து யூகிக்க முடியாத காட்சிகள், வேகமான திரைக்கதை என்று படம் கவனம் பெற்று உள்ளது.
நிறைய கிளைக் கதைக்குள் கதாபாத்திரங்கள் இருப்பதால் கதையோடு ஒன்றி செல்வதில் குழப்பம் உள்ளது. ரஞ்சின் ராஜ் பின்னணி இசையை ரசிக்க முடிகிறது. புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு பக்க பலம்.
கதிர், நரேன், நட்டி