யாத்திசை: சினிமா விமர்சனம்
|மன்னர்கள் காலத்து படமாக வந்துள்ளது.
சோழர்களை போர்களத்தில் வீழ்த்தி சக்தி வாய்ந்த பாண்டிய மன்னனாக உருவெடுக்கிறான் ரணதீரன். தோல்விக்கு பிறகு சோழர்கள் காட்டுக்குள் பதுங்கி விடுகிறார்கள். பாலை நிலத்தில் வசிக்கும் எயினர்களின் தலைவன் கொதி வெளியே வரும் ரணதீரனை தந்திரமாக வீழ்த்தி தனது சிறிய படையுடன் கோட்டைக்குள் நுழைகிறான். காட்டுக்குள் பதுங்கிய சோழ படைகளை துணைக்கு சேர்த்துக்கொள்ள தூதும் அனுப்புகிறான். ஆனால் அதற்குள் ரணதீரன் பெரும்படையோடு கோட்டையை நெருங்கி போருக்கு ஆயத்தமாகிறான். யார் வெற்றி வாகை சூடுகிறார்கள் என்பது மீதி கதை.
ராஜாக்களின் கதை என்றால் அழகு முகங்கள், ஆடை, ஆபரணங்கள், நேர்த்தியான போர் கருவிகள் என மக்கள் மனதில் இருக்கும் பிம்பங்களை மொத்தமாக உடைத்திருக்கிறார்கள்.
பாண்டிய மன்னனாக வரும் சக்திமித்ரனுக்கு சக்தி வாய்ந்த வேடம். அவரும் கேரக்டரின் தன்மையை புரிந்து மாமன்னனாகவே நடையிலும் உடையிலும் மாறி படம் பார்ப்பவர்களை சங்ககாலத்துக்கு அழைத்து செல்கிறார்.
எய்னர்களின் தலைவனாக வரும் செயோன் பிரிக்க முடியாத அளவுக்கு ரத்தமும் சதையுமாக கேரக்டரோடு இணைந்து நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்.
தேவரடியார்களாக வரும் ராஜலட்சுமி, வைதேகி இருவரும் அணிந்திருக்கும் ஆபரணங்களை விட அழகாக இருக்கிறார்கள். அவர்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். குருசோமசுந்தரம், சுபத்ரா, சமர் உள்பட படத்தில் வரும் ஏனைய கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வரலாற்று படத்துக்குரிய கம்பீரமும், பழமையும் கலந்த இசையை கொடுத்து கவனம் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் சக்கரவர்த்தி.
நிஜம் எது, கிராபிக்ஸ் எது என கேட்குமளவுக்கு சிறப்பான வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து.
வரலாற்று புனைவு கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து இப்படியும் இருக்கலாம் என புதுமையாக யோசித்து பாண்டியர்கள், எயினர்களின் கேரக்டர்களை வடிவமைத்ததில் இயக்குனர் தரணி ராசேந்திரனின் உழைப்பு பாராட்டுக்குரியது. படம் பார்ப்பவர்களுக்கு சங்க காலத்துக்குள் உலவிய உணர்வை ஏற்படுத்தியதிலும் அவரது திறமை பளிச்சிடுகிறது.