< Back
விமர்சனம்
வெந்து தணிந்தது காடு : சினிமா விமர்சனம்
விமர்சனம்

வெந்து தணிந்தது காடு : சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
17 Sept 2022 11:57 AM IST
நடிகர்: சிம்பு நடிகை: சித்தி இட்னானி  டைரக்ஷன்: கவுதம் வாசுதேவ் மேனன் இசை: ஏ.ஆர்.ரகுமான் ஒளிப்பதிவு : சித்தார்த்த நுனி

‘மாநாடு’ படத்தை அடுத்து சிம்பு ரசிகர்களுக்கு இன்னொரு காரசாரமான விருந்து.

கதை, நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகில் உள்ள கருவக்கரை என்ற குக்கிராமத்தில் ஆரம்பிக்கிறது. அந்த ஊரை சேர்ந்த (பி.எஸ்சி.) பட்டதாரி இளைஞர், சிம்பு. படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் உடங்காட்டில் விறகு வெட்டுகிறார். மகனுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை, அம்மா ராதிகா சரத்குமாருக்கு. உறவினர் ஒருவர் மூலம் மகனை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.

அங்கே பரோட்டா கடை என்ற போர்வையில், வேலையாட்களை அடியாளாட்களாக மாற்றி ரவுடி ராஜ்யத்துக்கு பயன்படுத்தும் அண்ணாச்சியின் பாதுகாவலர் ஆகிறார், சிம்பு. அண்ணாச்சிக்கும், குட்டி பாய் என்ற இன்னொரு தாதாவுக்கும் ஜென்ம பகை. ஒருவரையொருவர் போட்டுத்தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் சமரசம் செய்து வைக்க முயற்சிக்கிறார், அரசியல்வாதியான பெரிய தாதா.

அவருக்கு கட்டுப்பட்டு சமரசம் ஆனது போல் நடிக்கும் குட்டி பாய், அண்ணாச்சியை கொலை செய்ய ஒரு கொலையாளியை ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையில், சிம்புவுக்கும், துணிக்கடையில் வேலை செய்யும் (கதாநாயகி) சித்தி இட்னானிக்கும் காதல் ஏற்படுகிறது. அம்மா ராதிகா சரத்குமார் சம்மதத்துடன், சித்தி இட்னானியை சிம்பு திருமணம் செய்து கொள்கிறார்.

முதல் இரவில், சித்தி இட்னானி கடத்தப்படுகிறார். அவரை கடத்தியவர் யார், கடத்தல்காரனை சிம்பு கண்டுபிடித்தாரா, மனைவியை மீட்டாரா? என்ற கேள்விகளுக்கு விடை படத்தின் பின்பகுதியில் இருக்கிறது.

சிம்பு, ஒரு நட்சத்திர நாயகனுக்குரிய எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், காட்டில் விறகு வெட்டுவது போல், படத்தில் அறிமுகமாகிறார். அவர் மும்பைக்கு போய் பரோட்டா கடையில் வேலைக்கு சேர்வது, அசவுகரியங்களைப் பார்த்து முகம் சுளிப்பது வரை, அப்பாவியாக அனுதாபப்பட வைக்கிறார். சித்தி இட்னானியின் அழகில் மயங்கி, அவரை பின் தொடர்வதும், தன் காதலை சொல்லி, அவர் சம்மதத்தை பெறுவதும் கவித்துவமான காட்சிகள். சிம்புவின் முகமெல்லாம் காதல் ரேகைகள். டுமீல் டுமீல் காட்சிகளில், ஆக்ரோசத்தின் உச்சம் தொடுகிறார்.

சித்தி இட்னானி, முகவசீகரமும், கன்னத்து குழியழகும் கொண்ட அழகான புதுமுகம். திறமையாக நடிக்கவும் செய்கிறார். கிராமத்து ஏழைத்தாய் கதாபாத்திரம், ராதிகா சரத்குமாருக்கு புதுசு அல்ல. மகனை மும்பைக்கு அனுப்பி வைத்து, கதையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். அப்புக்குட்டியை குணச்சித்ர நடிகராக மாற்றி இருக்கிறார்கள். டெல்லி கணேஷ் ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான புதுமுகங்கள்.

மும்பையை இதுவரை யாரும் காட்டிராத அளவுக்கு படம்பிடித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி. ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடல்கள் அனைத்திலும் மென்மையான ராகங்கள். பின்னணி இசையும் அவர்தானா? தாதாக்களின் மோதல்தான் கதையின் கரு என்றாலும், வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன். படம் ஆரம்பித்த பதினைந்தாவது நிமிடத்தில் பார்வையாளர்களை கதைக்குள் கொண்டு போய் விடுகிறார், டைரக்டர். மும்பை தொடர்பான காட்சிகள், பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

கடைசி காட்சிகள், 'பாட்ஷா'வை நினைவூட்டுகின்றன.

மேலும் செய்திகள்