< Back
விமர்சனம்
வாரிசு : சினிமா விமர்சனம்
விமர்சனம்

வாரிசு : சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
12 Jan 2023 10:36 AM IST
நடிகர்: விஜய் நடிகை: ராஷ்மிகா  டைரக்ஷன்: வம்சி இசை: தமன் ஒளிப்பதிவு : கார்த்திக் பழனி

பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர் சரத்குமார். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு விஜய், ஷாம், ஸ்ரீகாந்த் என மூன்று மகன்கள்.

தனக்கு பிறகு மூவரில் யாரை வாரிசு ஆக்குவது என்பதில் முனைப்பாக இருக்கிறார் சரத்குமார். எந்திரத்தனமாக தொழிலே கதி என்று அவர் இருப்பது விஜய்க்கு பிடிக்கவில்லை. வாரிசு போட்டியில் இருந்து விலகி சரத்குமார் கோபத்துக்கும் ஆளாகி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சரத்குமாரின் தொழில் சாம்ராஜியத்தை சரித்து அவரது இடத்தை பிடிக்க இன்னொரு தொழில் அதிபரான பிரகாஷ்ராஜ் சதி செய்கிறார். ஷாம், ஸ்ரீகாந்த் இருவரும் வாரிசு நாற்காலியை பிடிக்கும் முயற்சியில் தந்தைக்கு எதிராக மாறுவது அதற்கு வாய்ப்பாக அமைகிறது. அவர்களை பகடை காயாக வைத்து சரத்குமாரை வீழ்த்த பிரகாஷ்ராஜ் களம் இறங்குகிறார்.

சரத்குமார் எடுக்க இருந்த டெண்டர்களும் மகனால் பிரகாஷ்ராஜ் கைக்கு மாறுகின்றன. குடும்பம் சிதறுகிறது. ஏழு வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பும் விஜய்க்கு எதிரிகளுடன் மோதி குடும்பத்தை ஒன்று சேர்த்து தந்தையின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வருகிறது. அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பது மீதி கதை.

விஜய்க்கு குடும்ப உறவுகளை சுமக்கும் அழுத்தமான கதை. அதை தனக்கே உரிய பாணியில் கெத்தாக செய்து இருக்கிறார். நடன காட்சிகள், பஞ்ச் வசனங்களில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். சண்டை காட்சிகளில் பொறி கிளப்புகிறார். குறும்புத்தனங்களில் சிரிக்கவும் வைக்கிறார். அப்பா, அம்மாவுடனான விஜய்யின் சென்டிமென்ட் சீன்களில் ஜீவன்.

ராஷ்மிகாவுக்கு சில இடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. இவருக்கும், விஜய்க்குமான காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. தந்தையாக வரும் சரத்குமார் குணச்சித்திர நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். ஆரம்பத்தில் பணக்கார மிடுக்கோடு வரும் அவர் மகன்கள் குழிபறிப்பதை பார்த்து உடைவது, விஜய்யிடம் வீட்டில் இருக்க முடியுமா என்று கெஞ்சுவது, அவர் வெளியேறுவதை மாடியில் கனத்த இதயத்தோடு நின்று பார்ப்பது என்று காட்சிக்கு காட்சி மனதில் நிறைகிறார்.

பிரகாஷ்ராஜ் கார்பரேட் வில்லனாக மிரட்டுகிறார். ஜெயசுதா தாய்ப்பாசத்தில் உருக வைக்கிறார். யோகிபாபு சிரிக்க வைக்கிறார். பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா சிறிது நேரம் வந்தாலும் பலே.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதியில் வேகம். காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். குடும்பம், சென்டிமென்ட், காதல், அதிரடி கலவையில் ரசிக்கும்படி கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் வம்சி பைடி பள்ளி. மாஸ் நடிகரான விஜய்யை வைத்து நேர்த்தியான குடும்ப படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வென்றும் இருக்கிறார்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டம் தெரிகிறது. தமன் இசையில் ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்கள் ஆட்டம் போட வைக்கும் ரகம். பின்னணி இசையும் காட்சியோடு ஒன்ற வைக்கிறது.

மேலும் செய்திகள்