< Back
விமர்சனம்
சத்திய சோதனை: சினிமா விமர்சனம்
விமர்சனம்

சத்திய சோதனை: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
22 July 2023 10:06 AM IST
நடிகர்: பிரேம்ஜி நடிகை: ஸ்வயம் சித்தா  டைரக்ஷன்: சுரேஷ் சங்கையா இசை: ரகுராம் ஒளிப்பதிவு : சரண்

கிராமத்தில் வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் ஜாலியாக பொழுதைக்கழிக்கிறார் நாயகன் பிரேம்ஜி.

ஒரு நாள் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடப்பதை பார்க்கிறார். அந்த சடலத்தின் கழுத்தில் கிடந்த ஒரு தங்கச்சங்கிலி, செல்போன், கெடிகாரத்தை எடுத்துக்கொண்டு உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து தகவல் கொடுக்கிறார்.

காவல் நிலையத்தில் உள்ள பேராசை கொண்ட காவலர்கள் பிணத்தில் நிறைய நகைகள் இருந்ததை அறிந்து பிரேம்ஜி சொல்வதை நம்ப மறுத்து, விசாரணைக்காக காவல் நிலையத்தில் பிடித்து வைத்து அடிக்கிறார்கள்

அடி தாங்க முடியாமல் காவல் நிலையத்துக்கு சொந்தமான வாக்கிடாக்கி, கொலைக்கு பயன்படுத்திய தடயங்களுடன் தப்பித்துச்செல்கிறார்.

தன் மீது விழுந்த வீண் பழியிலிருந்து பிரேம்ஜி எப்படி மீள்கிறார்? தங்க நகைகளை கொள்ளையடித்தது யார் என்பது மீதிக்கதை.

பிரேம்ஜி காமெடியில் குணசித்திர நடிப்பை கலந்து ரகளை செய்துள்ளார். நீதிபதி முன் நான் என்ன சொல்லபோறேன் என்ற டயலாக்கை திரும்ப திரும்ப சொல்லும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

காவலர்களில் ஒருவரான சித்தன் மோகன், லட்சுமி பாட்டி ஆகியோரின் சர்வ சாதாரண நடிப்பு ரசிக்க வைக்கிறது. பாட்டியின் திட்டம் வெளி உலகத்துக்குத் தெரியும் காட்சி அடடே போட வைக்கிறது.

நாயகி ஸ்வயம் சித்தா ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார். நீதிபதியாக வரும் ஞான சம்பந்தம், முத்துப்பாண்டி, இன்பார்மராக வரும் ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் வேடங்களை ரசித்து நடித்திருப்பதைக் காணமுடிகிறது.

கிராமத்தின் எளிமையை மிக அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சரண். இசையமைப்பாளர் ரகுராம் கதைக்குத் தேவையான பாடல்களை கொடுத்து பாஸ் மார்க் வாங்குகிறார்.

பின்னணி இசையிலும் சிரத்தை தெரிகிறது. கொலை, நகை திருட்டு, போலீஸ் விசாரணை என எளிய கதையில் நாட்டின் அவலத்தையும், அரசாங்க பதவியில் இருப்பவர்களின் பேராசையையும் நகைச்சுவை கலந்து எல்லோரும் ரசிக்கும்படியாகச் சொல்லியுள்ளார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. வழக்கமான லாஜிக் மீறல்கள் சில இடங்களில் இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை அதை மறக்கடிக்கச்செய்கிறது.

மேலும் செய்திகள்