திருச்சிற்றம்பலம் : சினிமா விமர்சனம்
|தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.
கதையை அவரே சொல்வது போல் படம் ஆரம்பிக்கிறது. "என் பெயர் திருச்சிற்றம்பலம். எல்லோரும் என்னை, பலம் என்று அழைக்கிறார்கள். ஒரு சின்ன தவறினால் என் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோய்விட்டது" என்று தனுஷ் சொல்வது போல் கதை விரிகிறது.
அவரும், அவரது அப்பா பிரகாஷ்ராஜ், தாத்தா பாரதிராஜா ஆகிய மூன்று பேரும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். அம்மாவும், தங்கையும் ஒரு விபத்தில் இறந்து போகிறார்கள். பிரகாஷ்ராஜ் கார் ஓட்டிக்கொண்டே செல்போனில் பேச முயற்சி செய்ததால் அந்த விபத்து நிகழ்ந்ததாக கருதி, அப்பாவுடன் பேசுவதையே நிறுத்துகிறார், தனுஷ்.
இவர்கள் வசிக்கும் அதே குடியிருப்பில், கீழ் வீட்டில் நித்யா மேனன் குடும்பம் வசிக்கிறது. தனுசும், நித்யா மேனனும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். தனுசுக்கு நித்யா மேனன் மீது காதல் இல்லை. ராஷிகன்னா மீது காதல் வருகிறது. அதை தனுஷ், நித்யா மேனனிடமே சொல்கிறார். தனுசின் காதலை ராஷிகன்னா ஏற்க மறுத்து விடுகிறார்.
இந்த நிலையில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் ஆகிய நான்கு பேரும் உறவினர் திருமணத்துக்காக கிராமத்துக்கு போகிறார்கள். திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பிரியா பவானி சங்கர் மீது தனுசுக்கு காதல் வருகிறது. இந்த காதலும் தோல்வியில் முடிகிறது. விரக்தி அடைந்த தனுசுக்கு தாத்தா பாரதிராஜா ஆறுதல் சொல்கிறார். 'உன் காதலி பக்கத்திலேயே இருக்கிறாள்' என்று நித்யா மேனனை அவர் அடையாளம் காட்டுகிறார். இந்த சமயம் பார்த்து நித்யா மேனனுக்கு கனடாவில் வேலை கிடைக்கிறது.
தனுசுக்கு நித்யா மேனன் மீது காதல் வந்ததா? அவருடைய காதலை நித்யா மேனன் ஏற்றுக்கொண்டாரா? அல்லது கனடாவுக்கு பறந்தாரா? இந்த கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
வரிசையாக சண்டை படங்களை கொடுத்து வந்த தனுசுக்கு, 'யாரடி நீ மோகினி' பாணியில் ஒரு காதல் படம். மென்மையான கதாபாத்திரம். அலட்டிக்கொள்ளாமல் வெகு இயல்பாக நடித்து இருக்கிறார். நித்யா மேனனுடன் நட்பு, தாத்தாவை நண்பர் போல் கருதி, அவருடன் பீர் குடிப்பது, அப்பாவை எதிரி போல் நினைத்து அடிக்கடி திட்டுவது, அதே அப்பா படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடப்பதை பார்த்து துடிப்பது என படம் முழுவதும் தனுஷ் ரசிகர்களை திருப்தி செய்து இருக்கிறார்.
படத்தின் மிக சிறந்த அம்சம், நித்யா மேனனின் நடிப்பு. அவர் சிரிப்பது, நடப்பது, பார்ப்பது என ஒவ்வொரு அசைவிலும் படம் பார்ப்பவர்களை வசியம் செய்து விடுகிறார். தனுசையும், பிரியா பவானி சங்கரையும் சந்திக்க வைத்து விட்டு ஓரமாக ஒதுங்கி நிற்கும் காட்சியில், நித்யா மேனனும், அவருடைய கதாபாத்திரமும் உயர்ந்து நிற்கிறது. 'நடிப்பு ராட்சசி' பட்டம் அவருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.
ராஷிகன்னாவும், பிரியா பவானி சங்கரும் ஊறுகாய் மாதிரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாரதிராஜா நடிப்பிலும் ராஜா என்பதை நிரூபித்து இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மகனுடன் கருத்து வேறுபட்ட அப்பாவாக பிரகாஷ்ராஜ் அவருடைய கதாபாத்திரத்துக்கு கவுரவம் சேர்த்து இருக்கிறார். ரேவதி, ஒரே ஒரு காட்சியில் தலையை காட்டுகிறார்.
அனிருத் இசையில், 2 பாடல்கள் ஹிட் அடித்து இருக்கிறது. காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப ஓம்பிரகாசின் கேமரா நகர்ந்து இருக்கிறது. மித்ரன் ஜவகர் டைரக்டு செய்து இருக்கிறார். குடும்பப்பாங்கான கதையும், கலகல காட்சிகளும் படத்தை கம்பீரமாக தூக்கி நிறுத்துகின்றன. ஒரு விபத்து ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக அப்பா-மகன் இடையே விரோதம் ஏற்பட்டு விடுமா என்ன? இந்த கேள்வி, படத்துக்கு திருஷ்டி பரிகாரம்.